பட்டா மாற்றத்துக்கு விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி




பட்டா மாற்றத்துக்கு விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆர்.பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயி. இவரது உறவினர்களான நித்யா, கவிதா ஆகிய 2 பேருக்கும் 9 சென்ட் மற்றும் 7 சென்ட் தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குரிய பட்டா மாறுதல் செய்வதற்காக ஆர்.பாலக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும், புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி கிராமத்தை சேர்ந்த அப்பாதுரையை (வயது 56) சிவக்குமார் அணுகினார்.

அப்போது பட்டா மாறுதல் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என சிவக்குமாரிடம் கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரை கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

கைது

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ.50 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலரிடம் கொடுக்க அறிவுறுத்தினர். அதன்படி சிவக்குமார் நேற்று பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்றார். அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரையிடம் ரூ.50 ஆயிரத்தை அவர் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அப்பாதுரையை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

பட்டா மாறுதலுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments