புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழா இன்று தொடங்குகிறது





புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழா இன்று தொடங்குகிறது

புத்தக திருவிழா

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தொடர்ந்து 7-வது புத்தக திருவிழாவை இன்று (சனிக்கிழமை) முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி மைதானத்தில் நடத்துகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவை விட இந்த ஆண்டு பிரமாண்டமான அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. வாசகர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் புத்தக திருவிழாவுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை வசதிகள், குடிநீர், சிற்றுண்டிக் கடைகள் என புத்தக திருவிழாவிற்கு வருபவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோளரங்கம்

இந்த புத்தக திருவிழாவை மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைக்க உள்ளனர். தொடர்ந்து வரும் நாட்களில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ராணுவ விஞ்ஞானி டில்விபாபு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பாரதி கிருஷ்ணகுமார், பத்திரிகையாளர் மதுக்கூர் ராமலிங்கம், மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா, திரைப்பட இயக்குனர் நடிகர் போஸ்வெங்கட் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் காலை நிகழ்வுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்வு, அறிவியல் உரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சாதனையாளர்கள் கவுரவிப்பு, கலை இலக்கிய போட்டிகள் மற்றும் குறும்படப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு, கோளரங்கம், அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ.3 கோடிக்கு புத்தக விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் ரூ.3 கோடிக்கு அதிகமாக விற்பனை நடைபெறும் என்று புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments