மத்திய அரசு புதிய திருத்த மசோதா தாக்கல் செய்கிறது வக்பு வாரிய சொத்துகளை கலெக்டரிடம் பதிவு செய்வது கட்டாயம் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி




வக்பு வாரிய சொத்துகளை கலெக்டரிடம் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் புதிய திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. ஆனால் அந்த மசோதாவை எதிர்ப்போம் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

வக்பு சட்டம்

பல்லாண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் மன்னர்களும், முஸ்லிம் செல்வந்தர்களும் தானமாக வழங்கிய நிலங்கள் வக்பு சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

அந்த பணம், மசூதி மற்றும் பள்ளிவாசல் பராமரிப்பு, முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

அச்சொத்துகளை நிர்வகிக்க தேசிய அளவில் மத்திய வக்பு கவுன்சிலும், மாநிலங்கள் தோறும் வக்பு வாரியங்களும் உருவாக்கப்பட்டன. வக்பு வாரியங்களை நிர்வகிக்க கடந்த 1995-ம் ஆண்டில் வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்றத்தில் தாக்கல்

இதற்கிடையே, மேற்கண்ட வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்து புதிய திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் 12-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்குள் நாடாளுமன்றத்தில் இம்மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-

அனைத்து வக்பு சொத்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வருவாய் வருவதாக கணக்கு காட்டப்படுகிறது. ஆனால் வக்பு வாரியங்கள் வைத்துள்ள மொத்த சொத்துகளுக்கு பொருத்தமான வகையில் இந்த தொகை இல்லை.

பெண்கள் நியமனம்

எனவே, வக்பு வாரியங்களின் செயல்பாட்டில் பொறுப்புடைமையையும், வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் நோக்கத்தில் இம்மசோதா கொண்டுவரப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தில் இருந்து வந்த கோரிக்கைகள் அடிப்படையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வக்பு வாரியங்கள் தங்கள் சொத்துகளின் உண்மையான மதிப்பை உறுதி செய்ய அச்சொத்துகளை மாவட்ட கலெக்டர்களிடம் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.

மேலும், அனைத்து வக்பு வாரியங்களிலும் தலா 2 பெண்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அகிலேஷ் யாதவ்

அதே சமயத்தில், வக்பு சட்ட திருத்த மசோதாவை கடுமையாக எதிர்க்கப்போவதாக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

இந்து-முஸ்லிம்களை பிளவுபடுத்துவதும், முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதும்தான் பா.ஜனதா அரசின் ஒரே வேலை. வக்பு சட்ட திருத்த மசோதாவை கடுமையாக எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் முகமது பஷீர் கூறியதாவது:-

மோடி அரசின் தீய உள்நோக்கத்தை இம்முடிவு காட்டுகிறது. வக்பு சொத்துகள் மீது பிடிமானம் வைத்திருக்க மோடி அரசு விரும்புகிறது. அந்த சொத்துகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்புகிறது.

இப்படி ஒரு மசோதா வந்தால், அதை கடுமையாக எதிர்ப்போம். ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் பேசுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒவைசி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. அம்ரா ராம் கூறியதாவது:-

பிரிவினை அரசியலில் பா.ஜனதா நம்பிக்கை கொண்டுள்ளது. இதே ரீதியில் பா.ஜனதா சென்றால், 2024-ம் ஆண்டு ‘டிரெய்லர்’ காண்பித்த நாங்கள், இனிமேல் முழு திரைப்படத்தை காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி கூறுகையில், ‘‘வக்பு வாரியத்தின் தன்னாட்சியை பறிக்க பா.ஜனதா அரசு விரும்புகிறது. இந்துத்துவா செயல்திட்டப்படி, வக்பு சொத்துகளுக்கு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments