இலங்கைக்கு இயக்கப்பட உள்ள ‘சிவகங்கை’ கப்பல் நாகை வந்தது விரைவில் சோதனை ஓட்டம்




இலங்கைக்கு இயக்கப்பட உள்ள 'சிவகங்கை' கப்பல் நாகை துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பலின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

நாகை-இலங்கை இடையே போக்குவரத்து

சோழர்களின் ஆட்சி காலத்தில் வாணிப துறைமுக நகரமாக நாகை விளங்கியது. இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு கப்பல்கள் இயக்கப்பட்டு வந்தன. புகழ்பெற்ற நாகை துறைமுகம் காலப்போக்கில் தனது செல்வாக்கை படிப்படியாக இழந்தது.

இதை மீட்டெடுக்கும் விதமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி நாகையில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

நிறுத்தம்

அப்போது கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 'செரியாபாணி' என்ற பெயர் கொண்ட கப்பல் இயக்கப்பட்டது. இதற்கு இரு நாட்டு பயணிகள் இடையே பெரும் வரவேற்பு இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இரு நாட்டு பயணிகள் ஏமாற்றம்

தொடங்கப்பட்டு ஒரு சில நாட்களிலேயே கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் இரு நாட்டு பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த மே மாதம் 13-ந் தேதி முதல் 'சிவகங்கை' என்ற புதிய கப்பல் இயக்கப்பட இருப்பதாக மீண்டும் அறிவிப்பு வெளியானது.

அறிவித்தபடி கப்பல் போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை. மே மாதம் 17-ந் தேதி, 19-ந் தேதி என கப்பல் இயக்கப்படும் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர். வணிக ரீதியாகவும், சுற்றுலா ரீதியாகவும் நாகை மாவட்டத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் கப்பல் போக்குவரத்து திட்டத்தை நிறுத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

மீண்டும் ‘சிவகங்கை’ கப்பல்

இந்த நிலையில் தற்போது மீண்டும் நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்ட சிவகங்கை கப்பல் நேற்று மாலை 4.30 மணி அளவில் நாகை துறைமுகம் வந்தது.

இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு முதலில் சோதனை ஓட்டமாக இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி

இதைத்தொடர்ந்து முன்பதிவு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட இருப்பதால் இருநாடுகளை சேர்ந்த பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments