மாணவர்களின் உயர் கல்விக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்ட தொடக்க விழா கோவையில் நடந்தது. திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘தடைகளை உடைத்து மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும்’ என்று அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம்
அதுபோல் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதற்கு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் என பெயர் சூட்டப்பட்டது.
அதன்படி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கான தமிழ்ப்புதல்வன் திட்டம், மாநில அளவில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கினார்.
பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மனதுக்கு நெருக்கமான திட்டம்
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இங்கு நான் வருவதற்கு முன்பே நேற்று இரவே, உங்கள் வங்கி கணக்கில் இந்த மாதத்திற்கான ரூ.1,000 தொகையை அனுப்ப உத்தரவிட்டிருந்தேன்.
உங்களுக்கு கிடைத்ததா?, குறுந்தகவல் வந்துவிட்டதா?, மகிழ்ச்சியா? என்று மாணவர்களை பார்த்து கேட்டார். அப்போது மாணவர்கள் ஆம்... என்று உற்சாகத்துடன் கைகளை தூக்கினர்.
நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டி, நாங்கள் செயல்படுத்திக்கொண்டு இருந்தாலும், ஒரு சில திட்டங்கள்தான் நம்முடைய மனதுக்கு நெருக்கமான திட்டங்களாக இருக்கும்.
வரலாற்றில் என்றைக்கும் நம்முடைய பெயரை சொல்லப்போகும் திட்டமாக இருக்கும். அப்படிப்பட்ட திட்டமாக உருவாகி இருக்கும், இந்த திட்டத்தை தொடங்கி வைக்க பெருமகிழ்ச்சியுடன் கோவைக்கு வந்திருக்கிறேன்.
முன்னோடி மாநிலம்
தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில், மக்களுக்கு நேரடியாக பயனளிக்க கூடிய ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலம் என்று சொல்வது போன்ற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்.
பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லாமல் பயணம் செய்யக்கூடிய வசதியை உருவாக்கிக்கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தோம். சொன்னபடியே, முதல்-அமைச்சர் ஆனதும் நான் போட்ட முதல் கையெழுத்தே விடியல் பயணம் திட்டத்திற்கு தான். விடியல் பயணத்தை இதுவரை 518 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி இருக்கின்றார்கள். அதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறோம்.
உன்னத திட்டம்
கல்வி உரிமை என்று எடுத்துக்கொண்டால், குழந்தைகளின் பசியைப் போக்கும் காலை உணவுத் திட்டம். இந்த திட்டத்தால், 20 லட்சத்து 73 ஆயிரம் மாணவர்கள் தினமும் வயிறார காலை உணவு சாப்பிடுகிறார்கள்.
அடுத்து நம்முடைய பயணத்தையும், லட்சியத்தையும் எதிர்காலத்திற்கு எடுத்துக்கொண்டு போகும் இளைஞர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம், நான் முதல்வன் திட்டம். இதுவரை 28 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து வேலைவாய்ப்பு பெறுவதையும் உறுதி செய்திருக்கிறோம். மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகிறார்கள்.
இதுபோன்று எங்களுக்கு எதுவும் கிடையாதா என்று பல மாணவர்கள் கேட்டார்கள். அவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் “தமிழ்ப்புதல்வன் திட்டம்”. அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு வர இருக்கும் மாணவர்களுக்கு, இனி மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க போகிறோம். உயர்கல்வியில் சேரும் ஏழை,எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள்
இந்த திட்டத்தில் கலை, அறிவியல், கல்லூரிகளில் 3-ம் ஆண்டு படிப்பவர்கள், என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படிப்பவர்கள், மருத்துவ படிப்பில் 5-ம் ஆண்டு படிப்பவர்களும் மற்றும் 8, 10-ம் வகுப்பு முடித்து, தொழிற்பயிற்சி படிக்கின்றவர்களும் பயன்பெறலாம்.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டுக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
நான் ஒரு தந்தை நிலையிலும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் இருந்து மாணவர்களாகிய உங்களுக்காக உருவாக்கியது தான் தமிழ்ப்புதல்வன் திட்டம். இதன் மூலமாக, நீங்கள் அடைகின்ற வளர்ச்சியை, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நான் கவனமாக கண்காணிப்பேன்.
என்னுடைய கனவு
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். இதன்மூலம், வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாடு உயரும். எல்லா குழந்தைகளும் உயர்கல்வி படிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும், பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஒரு மாணவர் கூட திசைமாறி சென்றுவிடக்கூடாது. மாணவர்கள் உயர்கல்வி பயின்று, வாழ்க்கையில் சிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.
இந்த இலக்குகளை அடைவதற்காக தான், நான் கடுமையாக உழைத்து புதிய பல திட்டங்களை உருவாக்கியிருக்கிறேன். மாணவர்களாகிய நீங்கள் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படித்து உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.
அறிவார்ந்த சமுதாயம்
வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த, ஒரு அறிவார்ந்த தமிழ்ச்சமுதாயத்தை வருங்காலத்தில் உருவாக்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க எதுவும் தடையாக இருக்க கூடாது. தடையை உடைத்தெறிந்து வெற்றி பெறவேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை செய்ய, நான் இருக்கிறேன். நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது.
ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட தடங்கல்களை எதிர்கொண்டார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் பலவீனமானவராக வீட்டுக்குள் முடங்கிவிடாமல் தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் உள்ள பெண்ணாக போராடி, இன்றைக்கு நாம் எல்லோரும் பாராட்டக்கூடிய அளவிற்கு அவர் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.
தடைகளை உடைத்தெறியுங்கள்
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். “தடைகள் என்பது உடைத்தெறியத்தான்”. தடைகளைப் பார்த்து நீங்கள் ஒருபோதும் சோர்ந்துவிடக்கூடாது. முடங்கிவிட கூடாது. வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக இருக்கவேண்டும். அதை குறி வையுங்கள்! நிச்சயம் ஒருநாள் வெற்றி வசப்படும்.
உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைவிட, அதிக நம்பிக்கையை நான் உங்கள் மேல் வைத்திருக்கிறேன். உங்களுக்கு பின்னால், உங்கள் பெற்றோர், உங்கள் குடும்பம் மட்டுமல்ல; என்னுடைய திராவிட மாடல் அரசும் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
வாழ்க்கையில் பல வெற்றிகளைப்பெற போகும் புதுமைப்பெண்களுக்கும், தமிழ்ப்புதல்வர்களுக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதாஜீவன், எம்.பி.க்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில், 6,978 மாணவர்களுக்கு உதவித்தொகையை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழ் புதல்வன் திட்டம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் சிவபுரம் ஜெ.ஜெ.கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை எடுப்பதற்காக ஏ.டி.எம். காா்டுகளை வழங்கினார். விழாவில், புதுக்கோட்டை நகராட்சி துணை தலைவர் லியாகத் அலி, முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
6,978 மாணவர்கள்
இதேபோல் ஆலங்குடி, வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது கூறியதாவது:-
சுதந்திரம் அடைந்த போது தமிழ்நாட்டில் 2 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. அதன்பிறகு அரசு கலைக்கல்லூரிகள் 43 இருந்தன. இன்று தமிழ்நாட்டில் 22 பல்கலைக்கழகங்களும், 153 அரசு கலைக்கல்லூரிகளும் உள்ளன. ஆலங்குடி அரசு கலைக்கல்லூரி ரூ.12½ கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரிக்கு ஆடிட்டோரியம், சுற்றுச்சுவர் கட்ட ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் வகுப்பறையில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 65 கல்லூரிகளை சேர்ந்த 6,978 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி, திருவரங்குளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வள்ளியம்மை, கல்லூரி முதல்வர் விஜயா, துணை முதல்வர் சேதுராமன், மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல், மாவட்ட கவுன்சிலர் உஷா, ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, ஆலங்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.