இ-சேவை மையங்கள் மூலம் சுய சான்றிதழ் கட்டிட அனுமதி தமிழக அரசு திட்டம்




இ-சேவை மையங்கள் மூலம் சுய சான்றிதழ் கட்டிட அனுமதி வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

வரப்பிரசாதம்

தமிழக அரசு பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறுவதற்காக சுய சான்றிதழ் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 2,500 சதுரடி மனையில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் உடனடி கட்டிட அனுமதி வழங்கப்படும்.

பொதுமக்களே நேரிடையாக https://onlineppa.tn.gov.in/SWP-web/ login என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதால் லஞ்ச-லாவண்யம் என்பது கிடையாது. கூடுதல் கட்டணம் யாருக்கும் செலுத்த தேவையில்லை. இந்த திட்டம் பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தில் நேரிடையாக விண்ணப்பிக்கும்போது ஏதாவது தவறு நடந்துவிடும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் என்ஜினீயர்கள் அல்லது வேறுநபர்கள் மூலம் விண்ணப்பம் செய்கின்றனர். எனவே இந்த திட்டத்தில் சில மாற்றம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

இ-சேவை மையம்

இது குறித்து துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பொது மக்கள் கட்டிட அனுமதி எளிதாக பெறவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டம். கட்டிட அனுமதிக்காக விண்ணப்பம் செய்பவர்களில் சுமார் 72 சதவீதம் பேர் 3 ஆயிரத்து 500 சதுரடிக்குள் கட்டுபவர்கள்தான். எனவே தான் அந்த அளவினை தேர்வு செய்து சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி உடனே வழங்கப்படுகிறது. இதற்கான இணையதளத்தில் பொதுமக்கள் எளிதாக விண்ணப்பம் செய்து அனுமதி பெறலாம். ஆனால் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் என்ஜினீயர்கள் அல்லது வேறுசிலர் மூலம் தான் விண்ணப்பம் செய்யும் நிலை உள்ளது. அவர்கள் அரசு கட்டணத்தை விட கூடுதலாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கேட்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அரசுக்கும், மக்களுக்கு இடையே இருப்பவர்களால் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதனால் தான் அரசுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டினை தடுக்க தமிழக அரசு, இ-சேவை மையங்கள் மூலம் கட்டிட அனுமதி சான்றிதழ் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. பொதுமக்கள் அங்கு சென்று எளிதாக விண்ணப்பம் செய்து கட்டிட அனுமதி சான்றிதழ் பெறலாம். கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments