விவசாய பணிக்காக கல்லணை கால்வாய் திறப்பு: மேற்பனைக்காட்டிற்கு வந்த தண்ணீருக்கு விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு




விவசாய பணிக்காக கல்லணை கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் மேற்பனைக்காட்டிற்கு வந்தது. அதனை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டது. கடந்த வாரம் தஞ்சை மாவட்டம் ஈச்சான்விடுதி அணைக்கட்டுக்கு கல்லணை கால்வாய் நீர் வந்தது. அன்றிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்த தண்ணீர் திறக்கப்பட்டது.இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள் ஆவணம் கிராமத்தில் ஆவலோடு ஒன்றுகூடி கல்லணை கால்வாயில் காவிரி என மலர்களால் எழுதியும், கால்வாயின் மண்ணை முத்தமிட்டும், ஆர்ப்பரித்து வந்த தண்ணீரை தொட்டு வணங்கியும் வரவேற்றனர். அவ்வாறு திறக்கப்பட்ட கல்லணை கால்வாய் தண்ணீர் புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட எல்லையான நெடுவாசல் பகுதிக்கு வந்தடைந்தது.

கடைமடைக்கு வந்த தண்ணீர்

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கடைமடை பகுதிக்கு கல்லணை கால்வாய் மூலம் தண்ணீர் நேற்று மாலை வந்தடைந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் மலர் தூவி வரவேற்றனர்.

விவசாயிகள் இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர். விவசாய பணிக்காக மேட்டூர் அணை குறித்த நேரத்தில் திறக்கப்பட்டுள்ளதால் புதுக்கோட்டை- தஞ்சை மாவட்ட எல்லையோர பகுதி காவிரி கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

© 2024 All Rights Reserved. Powered by Summit
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments