கல்லணை கால்வாய் வழியாக நாகுடிக்கு வந்த காவிரி தண்ணீருக்கு விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு




கல்லணை கால்வாய் வழியாக நாகுடிக்கு வந்த காவிரி தண்ணீருக்கு விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

கல்லணை கால்வாய்

மேட்டூர் அணையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தண்ணீர் வந்துள்ளது. இதனால் அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஈச்சான்விடுதி அணைக்கட்டுக்கு கல்லணை கால்வாய் வழியாக காவிரி தண்ணீர் வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்து பல்வேறு பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் ஆவணம் கிராமத்தில் ஆவலோடு ஒன்று கூடி காவிரி தண்ணீரை வரவேற்றனர். மேலும் புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட எல்லையிலான நெடுவாசல் பகுதி வழியாக காவிரி தண்ணீர் ஆலங்குடி, மேற்பனைக்காடு பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தது.

வரவேற்பு

அதனையடுத்து நாகுடி கடைமடை பகுதிக்கு கல்லணை கால்வாய் மூலமாக காவிரி தண்ணீர் நேற்று காலை 9.30 மணி அளவில் வந்தடைந்தது. இதனை கல்லணை கால்வாய் பாசனத்தாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில், விவசாயிகள் கடைமடை பகுதிக்கு வந்த தண்ணீரை வணங்கி மலர் தூவி வரவேற்றனர். மேலும் விவசாயிகள் இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர். விவசாய பணிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டுள்ளதால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதிக்கு கரை புரண்டு வந்த காவிரி தண்ணீரை பயன்படுத்தும் கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments