சேதுபாவாசத்திரம் அருகே பரிதாபம்: வேன் சக்கரத்தில் சிக்கி 1¾ வயது குழந்தை சாவு




சேதுபாவாசத்திரம் அருகே வேன் சக்கரத்தில் சிக்கி 1¾ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

வௌிநாட்டில் வேலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் அமல்ராஜ்(வயது 33). இவருடைய மனைவி தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கொள்ளுக்காடு அந்தோணியார்புரத்தை சேர்ந்த லெப்தியா(30) . இவர்களுக்கு 1¾ வயதில் ரிசிவான் என்ற ஆண் குழந்தை இருந்தது. அமல்ராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் லெப்தியா தனது குழந்தையுடன் கொள்ளுக்காடு அந்தோணியார்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். லெப்தியாவின் தாய்வீடு கடற்கரை மீன்பிடித்துறைமுகம் ஓரத்தில் உள்ளது.

இதனால் இங்கு நண்டு, மீன்களை எடுத்து செல்ல அடிக்கடி சரக்கு வேன்கள் வந்த செல்வது வழக்கம். நேற்றுமுன்தினம் ஒரு சரக்கு வேன் மீன், நண்டுகளை எடுத்து செல்ல அந்தோணியார்புரம் கிராமத்துக்கு வந்தது.

பரிதாப சாவு

அப்போது தனது வீட்டின் அருகே குழந்தை ரிசிவான் விளையாடிக்கொண்டு இருந்தது. ஊருக்குள் வந்த வேனின் பின்புற சக்கரத்தில் குழந்தை ரிசிவான் எதிர்பாராதவிதமாக சிக்கி படுகாயம் அடைந்தான். உடனே குழந்தையை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரிசிவான் உயிரிழந்தான்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சேதுபாவாசத்திரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments