மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்கு மானியத்துடன் விதைத்தொகுப்பு தோட்டக்கலை துறை ஏற்பாடு




மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு, தோட்டக்கலைத்துறை மானியத்துடன் விதைத் தொகுப்புகளை வழங்குகிறது.

மாடித்தோட்டம்

இன்றைய வேகமான உலகில் எல்லோரும் ரசாயனம் கலந்த உணவுகளை கெடுதல் என்று தெரிந்தோ, தெரியாமலோ சாப்பிடுகிறோம். அதை தவிர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் பலர் இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் காய்கள் மற்றும் கனிகளை தேடிச்செல்கிறார்கள். எல்லோரும் `ஆர்கானிக் புட்' என்ற அறிவிப்புகளுடன் விற்கப்படும் உணவுப்பொருட்களை தேடிச்செல்லும் கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறோம்.

இத்தகைய பொருட்கள் விலையும் அதிகம். எனவே எல்லோராலும் அதிக விலை கொடுத்து உணவுப்பொருட்களை வாங்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தது தான் மாடித்தோட்டம். இதன் மூலம் நமக்கு வேண்டிய காய்கறிகளை, இயற்கை விவசாயம் மூலம் நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். புதுக்கோட்டை நகரப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களும், சிறிய இடங்களில் சொந்தமாக வீடு கட்டி இருப்பவர்களுக்கு வீட்டு முன்பு செடி, கொடிகள், காய்கறிகள் பயிரிடுவது என்பது இயலாத காரியம். அப்படிப்பட்டவர்கள் மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மாடித் தோட்டம் அமைக்க தமிழக அரசே உதவி செய்து வருகிறது. அதுவும் குறைந்த விலையில், தமிழகம் முழுவதும் மானிய விலையில் மாடித்தோட்ட காய்கறி விதை தொகுப்பை தோட்டக்கலை துறை மூலம் வழங்குகிறது.

என்னவெல்லாம் இருக்கும்?

மாடி தோட்டத்தை எப்படி அமைக்க வேண்டும், எப்படி பராமரிக்க வேண்டும், எந்த காலக்கட்டத்தில் எத்தகைய உரத்தை தெளிக்க வேண்டும் என்பது தொடர்பான கையடக்க தகவல் அறிக்கையும் தோட்டக்கலைத் துறை வழங்குகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து மாடி தோட்டத்துக்கான விதைத்தொகுப்பை தோட்டக்கலைத் துறை வழங்கி வருகிறது. தோட்டக்கலை துறை வழங்கும் இந்த தொகுப்பில், 2 கிலோ கோகோ பித் (தென்னை நார் துகள் கட்டி), 6 வகை காய்கறி விதைகள், 100 மில்லி வேப்ப எண்ணெய், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் நுண்ணுயிர் உரங்கள் (அசோஸ்பைரில்லம்), தக்காளி, கத்தரி, வெண்டை, கீரை, கொத்தவரங்காய், அவரைக்காய் விதைகள் அடங்கியதாக இந்த தொகுப்பு இருக்கும்.

தோட்டக்கலை துறை அலுவலகம்

இந்த கிட் விலை ரூ.900, ஆனால் அரசு மானியத்துடன் பொதுமக்களுக்கு ரூ.450-க்கு வழங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டாரங்களில் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம். இது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வினியோகிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாடித்தோட்ட விதை தொகுப்பு வாங்க விரும்புபவர்கள் ஆதார் அட்டை நகலை கொண்டு செல்ல வேண்டும். மாடித்தோட்டம் அமைக்க தெரியாதவர்களுக்கு அரசு வழங்கும் சிற்றேடு பெரிதும் உதவியாக இருக்கும். மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பது குறித்த ஒவ்வொரு படிநிலையையும் அது விளக்குகிறது. புதுக்கோட்டை நகரப்பகுதியிலும், அறந்தாங்கியிலும் மாடித்தோட்டம் அதிகமாக உள்ளது. மற்ற இடங்களிலும் வீடுகளில் மாடித்தோட்டம் சிறிய அளவில் அமைத்துள்ளனர்.

மக்களிடம் விழிப்புணர்வு

புதுக்கோட்டை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கார்த்தி பிரியா கூறுகையில், ``மக்களிடம் மாடித்தோட்டம் குறித்து அதிகம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பலர் மாடித்தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை பயன்படுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 300 தொகுப்பு வர உள்ளது. வந்ததும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் என்றார். மாடித் தோட்டம் திட்டத்திற்காக ரூ.90 லட்சத்தை அரசு ஒதுக்கியுள்ளது. சென்னையில் 3,500 மாடித்தோட்ட `கிட்' ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியம், மகிழ்ச்சி

புதுக்கோட்டை நகரில் மாடித்தோட்டம் அமைத்துள்ள அடைக்கலம் கூறுகையில், ``காய்கறி வகைகள், பழ வகைகள், மலர் வகைகள், கொடி வகையிலான செடிகளை நட்டு வளர்த்து வருகிறேன். இதில் விளையும் காய்கறிகள் எங்களது வீட்டிற்கு போக பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்து வருகிறோம். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாடித்தோட்டத்தை பராமரிக்கப்படுகிறது. இதில் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இயற்கையிலான காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments