அறந்தாங்கி அருகே பயங்கரம்: தகராறை விலக்கிவிட்ட வாலிபர் கல்லால் தாக்கி கொலை தப்பி ஓடிய 7 பேர் கைது.





அறந்தாங்கி அருகே பயங்கரம்:
தகராறை விலக்கிவிட்ட வாலிபர் கல்லால் தாக்கி கொலை
தப்பி ஓடிய 7 பேர் கைது

அறந்தாங்கி அருகே தகராறை வெலிக்கிவிட்ட வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, தப்பி ஓடிய 7 பேரை போலீ–சார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மதுபோதையில் தகராறு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வல்லவாரி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 42). இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இங்கு அறந்தாங்கி தாலுகா மஞ்சக்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் (42) என்பவர் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், மணமேல்குடியை சேர்ந்த ஜான் (37) என்பவர் நேற்று முன்தினம் இரவு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார். இதற்கிடையே ஜான், ஆம்லெட் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஞானசேகரன் அவரை திட்டி வெளியே அனுப்பியுள்ளார்.

பீர் பாட்டிலால் தாக்குதல்

இதனை அவமானமாக நினைத்த ஜான் நடந்த சம்பவத்தை தனது தம்பி டேவிட்டிடம் (34) தெரிவித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களது நண்பர்கள் 5 பேருடன் மீண்டும் மது அருந்திவிட்டு அதே ஓட்டலுக்கு இரவு 11.30 மணிக்கு சென்றனர். பின்னர் கொத்து பரோட்டா கேட்டு சுரேஷிடம் தகராறு செய்துள்ளனர். அதற்கு அவர் இரவு 11.45 மணியாகிவிட்டதால் ஓட்டலை மூட வேண்டும். அதனால் கொத்து பரோட்டா போட முடியாது என்று தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் சுரேஷின் தலையில் தாக்கினர். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் ஞானசேகரன் அவர்களை தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கினர். அப்போது அந்த வழியாக சென்ற அறந்தாங்கி அருகே உள்ள ஆயங்குடியை சேர்ந்த தனியார் கியாஸ் ஏஜென்சியில் டிரைவராக பணிபுரியும் பிரபு (24) என்பவர் தகராறை விலக்கிவிட சென்றார்.

கல்லால் தாக்கி கொலை

இதில் ஆத்திரம் அடைந்த ஜான் தரப்பினர் 7 பேரும் பிரபுவையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் அருகே கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபு மயங்கி விழுந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஓட்டல் முன்பு திரண்டு வந்தனர். இதில் பீதியடைந்த அவர்கள் 7 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் படுகாயம் அடைந்த பிரபு, சுரேஷ், ஞானசேகரன் ஆகியோ ரை அப்பகுதி மக்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரபுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஞானசேகரன், சுரேஷ் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரபுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

7 பேர் கைது

இதற்கிடையே பிரபுவை கொலை செய்த ஜான், டேவிட் உள்பட 7 பேரையும் அறந்தாங்கி போலீசார் பேராவூரணியில் கைது செய்தனர். பின்னர் அவர்களை அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் பிரபுவின் உடல் அவரது சொந்த ஊரான வல்லவாரிக்கு ேநற்று மாலை கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பேராவூரணி சாலையில் பஸ்சை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பிரபுவை கொலை செய்த 7 பேரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.பலியான பிரபுவுக்கு நளினா (30) என்ற மனைவியும், 2 பெண்குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments