நம்புதாளை கடற்கரை கிராமப்பகுதியில் நவீன மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டில் தகவல்




ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த விஜய், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராமத்தில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசிக்கின்றனர். 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், 100 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் உள்ளன. கடலுடன், ஆறு கலக்கும் முகத்துவார பகுதியில் எங்கள் கிராமம் அமைந்துள்ளது. ஆற்றின் வலதுபுறமும், இடதுபுறமும் ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதனால் ஆற்றை கடந்து ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு செல்ல மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், சுனாமி போன்ற பேரிடர்களின்போதும், மீனவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும், கால்நடைகளும் மிகவும் சிரமப்படுகிறோம். இங்கு ஆற்றின் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி பாலம் அமைக்கவும், பக்கவாட்டு சுவர்களை எழுப்பி தரவும், இப்பகுதியை சுகாதாரமாக பராமரித்து அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல்கள் விவேகானந்தன், தீரன் திருமுருகன் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர் கிராமம் கழிமுக பகுதியாக இருப்பதால் அடிப்படை வசதியின்றி தவிக்கின்றனர். அந்த பகுதியை ஆழப்படுத்தி படகுகள் நிறுத்தி வைக்க வசதி செய்யவும், போக்குவரத்து வசதிக்காக பாலம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என வாதாடினர்.

பின்னர் மீன்பிடி துறைமுக அதிகாரிகள் சார்பில் அரசு பிளீடர் திலக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் கிராமப்பகுதியில் நவீன மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இங்குள்ள ஆற்றின் முகத்துவாரமும் ஆழப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த நடவடிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மனுதாரர் மீண்டும் இந்த கோர்ட்டை நாடலாம் என உத்தரவிட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments