பட்டுக்கோட்டையில் 7 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது: டெமு ரெயிலை காரைக்குடி வழியாக திருச்சிக்கு நீட்டிக்க வேண்டும் ரெயில் பயணிகள் கோரிக்கை




பட்டுக்கோட்டையில் 7 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் டெமு ரெயிலை காரைக்குடி வழியாக திருச்சிக்கு நீட்டிக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

டெமு ரெயில்

பட்டுக்கோட்டை பகுதி ரெயில் பயணிகள் சார்பில் தெற்கு ரெயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை வரை டெமு ரெயில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திருவாரூரில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு காலை 10.05 மணிக்கு வருகிறது.

7 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது

பின்னர் 7 மணிநேரம் பட்டுக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் பட்டுக்கோட்டையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு செல்கிறது. திருவாரூரில் இருந்து வரும் இந்த ரெயிலை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்க வேண்டும்.

திருச்சியில் இருந்து சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் வட மாநிலங்களுக்கு ரெயிலில் செல்லலாம். திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இருந்து திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை பகுதிக்கு அதிக அளவில் பயணிகள் வர்த்தகர்கள், மாணவர்கள் நோயாளிகள் பஸ்கள் மூலமாகவும் சொந்த வாகனங்கள் மூலமாகவும் சென்று வருகின்றனர்.

திருச்சி வரை நீட்டிக்க வேண்டும்

திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை வரை காலை 10.05 மணிக்கு வந்து மாலை 15.15 மணிவரை காத்திருக்கும் டெமு ரெயிலை திருச்சி வரை நீட்டித்து இயக்கினால் இப்பகுதியில் உள்ள பயணிகள் வர்த்தகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரெயில் மூலமாக செல்லும் தூரம் அதிகம் இருந்தாலும் குறைந்த பயண நேரம், குறைந்த பயண கட்டணம், கழிவறைகளுடன் கூடிய வசதியான பயணமாக இருப்பதால் அதிக அளவில் பயணிகள், வர்த்தகர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் நோயாளிகள் பயணம் செய்து பயன் பெறுவார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட பழமையான ரெயில் பாதையில் இதுநாள் வரை இப்பகுதியில் இருந்து புதுக்கோட்டை, திருச்சிக்கு ரெயில் வசதி இல்லாமல் இருக்கிறது.இப்பகுதி மக்களுக்கு திருச்சிக்கு செல்ல ரெயில் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments