புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க திட்டம் தொழில் முனைவோர்களுடன் 20-ந் தேதி ஆலோசனை கூட்டம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக தொழில் முனைவோர்களுடன் 20-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

ஜவுளி பூங்கா

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.

ஆலோசனை கூட்டம்

மேலும், அதிகளவில் அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும், அனைத்து தொழில்முனைவோர்களும் முன்வரவேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 20-ந் தேதி காலை 10.30 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் தவறாது கலந்து கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கரூர் தாந்தோணிமலையில் நவலடியான் வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள துணி நூல்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் தொலைபேசி எண் 04324-299544, செல்போன் எண் 7397556156 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments