உஷாராக இருக்க வேண்டுகோள் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு வலை விரிக்கும் மோசடி கும்பல் போலீஸ் டி.ஜி.பி. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்




வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு மோசடி கும்பல் வலை விரிப்பதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

போலீஸ் கமிஷனர் சொன்ன தகவல்

தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய சைபர் குற்றங்கள் ‘கம்போடியா' நாட்டில் இருந்து அரங்கேற்றப்படுவதாகவும், இந்த மோசடி செயலில் நம் நாட்டு இளைஞர்களை ஈடுபடுத்தி வருவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பரபரப்பு தகவலை சமீபத்தில் வெளியிட்டார்.

மேலும் அவர், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு வேலைக்கு சென்ற இளைஞர்களை குறிவைத்து மோசடி கும்பல் செயல்பட்டு வருவதாகவும், எனவே இந்த நாடுகளுக்கு சென்றவர்களின் பெயர் விவரம் மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகமை மூலம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

டி.ஜி.பி. வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

இந்த நிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று பரபரப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வெளிநாட்டு வேலை தேடும் இளைஞர்கள், போலியான வாக்குறுதிகளை நம்பி வெளிநாடு சென்று அங்கு இணைய மோசடிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு வெளிநாடு அழைத்துச்செல்லப்படுபவர்கள் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அங்கிருந்து லேவோஸ் மற்றும் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கம்பி வேலியிடப்பட்ட மோசடி நடக்கும் வளாகங்களில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

அங்கு பெடெக்ஸ் மோசடி, முதலீட்டு மோசடி, சட்ட விரோத கடன் வழங்கும் செயலிகள், திருமண மோசடி, காதல் மோசடி போன்ற இணைய மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மறுக்கும் பட்சத்தில் மின்சாரம் பாய்ச்சுதல் மற்றும் பிற உடல் ரீதியிலான துன்புறுத்துதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

10 இடைத்தரகர்கள் கைது

இவ்வாறு படித்த இளைஞர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இணைய அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக போலீஸ்துறை முன்னோடியாக திகழ்கிறது.

இந்த வகையில் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பாத 1,285 பேரின் விவரம் சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைத்த இடைத்தரகர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் அதற்கு முன் வேலையின் தன்மை, வேலை செய்யும் இடம் ஆகியவற்றை சரிபார்த்து செல்லவும்.

உதவி எண்கள்

இதையும் மீறி யாரேனும் பாதிக்கப்பட்டால் டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வெளிநாட்டு தமிழர்கள் பிரிவு போலீஸ் சூப்பிரண்டை 94986 54347 என்ற செல்போன் எண்ணில் தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம்.

அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்த்துறை ஆணையரகத்தின் உதவி எண்களை 18003093793 (இந்தியாவில் உள்ள உறவினர்கள்), 8069009901 (வெளிநாட்டில் பாதிக்கப்பட்டவர்கள்) தொடர்புக் கொள்ளலாம். 80690 09900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.

இவ்வாறு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments