நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்




நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வு கூடத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ், "உயர்வுக்குபடி" என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கி தொடங்கி வைத்து மண்டல வாரியாக கல்லூரி பட்டியல் கையேட்டினை வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி கல்வியினை முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் "உயர்வுக்குபடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி கோட்ட அளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகள் இம்மாதம் 12-ந் தேதி மற்றும் 20-ந் தேதிகளில் புதுக்கோட்டை கோட்டத்திலும், 13-ந் தேதி மற்றும் 24-ந் தேதிகளில் அறந்தாங்கியிலும், 18-ந்தேதி மற்றும் 27-ந் தேதிகளில் இலுப்பூரிலும் நடைபெற உள்ளது.

அரங்குகள் அமைப்பு

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு மாணவரும் தங்கள் எதிர்காலத்திற்கு தேவையான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உரிய வழிகாட்டுதலும், அவர்களை சரியான பாதையில் செல்வதற்கான ஊக்கத்தையும் அளிப்பதாகும்.

பள்ளிப்படிப்பை முடித்து இதுவரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கு ஏதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் இம்முகாமில் கலந்துகொண்டு உடனடி சேர்க்கைக்காக அரங்குகள் அமைத்துள்ளனர்.

ஆலோசனை

இதற்காக கல்வித்துறை, தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வங்கிகள் ஆகிய துறைகளின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதனைப் பெறுவது குறித்த வழிகாட்டுதலுக்காக சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி, கல்விக்கடன், கல்வி உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிடச்சான்று, சாதிச்சான்று முதலிய சான்றுகள் பெறுதல், விடுதியில் தங்கிப் படிப்பதற்கான வசதிகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments