குரூப்-2 தேர்வை 11,566 பேர் எழுதினர் 3,822 பேர் வரவில்லை




புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 11,566 பேர் எழுதினர். 3,822 பேர் வரவில்லை.

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2, 2 ஏ தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 55 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடந்தது. இத்தேர்வை எழுதுவதற்காக அந்தந்த தேர்வு மையங்களுக்கு நேற்று காலையிலேயே தேர்வர்கள் வந்தனர். தேர்வு மையத்திற்குள் காலை 9 மணிக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்கள் அனைவரையும் பலத்த சோதனைக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.

11,566 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வை எழுதுவதற்கு 15 ஆயிரத்து 388 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 11 ஆயிரத்து 566 பேர் தேர்வு எழுதினர். 3,822 பேர் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வினை முதன்மை கண்காணிப்பு அலுவலர்களாலும், கண்காணிப்பு அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டது. மேலும் இத்தேர்வு நிகழ்வுகளை வீடியோகிராபர்கள் மூலமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மையத்தில் தேர்வு நடைபெற்றதை மாவட்ட கலெக்டர் அருணா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யா, துணை கலெக்டர் (பயிற்சி) கவுதம், தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

கைக்குழந்தைகளுடன்...

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மையத்தில் தேர்வு எழுதுவதற்கு கைக்குழந்தைகளுடன் வந்த பெண் தேர்வர்கள் தங்களுடன் வந்தவர்களிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். இதனால் அக்குழந்தைகளை அவர்கள் மையத்தின் வெளிப்பகுதியில் சாலையோரம் அமர்ந்து கவனித்து வந்தனர். முன்னதாக புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மையத்தில் தேர்வு எழுத காலை 9 மணிக்கு பிறகு வந்த சிலர், மையத்தின் பக்கவாட்டு கதவு வழியாக உள்ளே சென்றனர். இதற்கிடையில் அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்ததால் அந்த கதவையும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மூடி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments