புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் மும்முரம் டிஜிட்டல் பலகை, நுழைவு வாயில் அமைப்பு




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் பலகை, நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

அடிப்படை வசதிகள்

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியது. அந்த வகையில் அம்ருத் திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் இடம் பெற்றது. இதில் பல கோடிக்கணக்கான ரூபாயில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

புதுக்கோட்டை ரெயில் நிலையம் பழமையானதாகும். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானமாக விளங்கிய போதே ரெயில் நிலையம் உருவாகி இருந்தது. புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக சென்னை, ராமேசுவரம், திருச்சி, காரைக்குடி, நாகர்கோவில், செங்கோட்டை, புதுச்சேரி உள்பட வடமாநிலங்களுக்கும் ரெயில்கள் சேவை உள்ளன. தற்போது 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

நுழைவுவாயில்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரெயில் நிலையம் புதுப்பொலிவாக மாறிவருவதை அன்றாடம் ரெயில்களில் பயணம் செய்து வருபவர்கள் காண்கின்றனர். ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் நுழைவுவாயில் கட்டப்படுகிறது. அந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ரெயில்கள் வருகை, புறப்பாடு நேரம் உள்ளிட்ட விவரங்கள் அறிய டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதேபோல் ரெயில் நிலையத்தில் உள்ள 2 நடைமேடைகளில் ரெயில் பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதை காட்டும் டிஜிட்டல் பலகையும் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் அமரும் இருக்கைகளில் புதிதாக டைல்ஸ் கற்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

‘லிப்ட்’ வசதி

இதேபோல் நடைமேடையில் புதிய டைல்ஸ் கற்களும் பொருத்தப்படுகிறது. ரெயில் நிலையத்தில் நடைமேடைகளில் விடுபட்ட இடங்களிலும் மேற்கூரை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கார்கள் விசாலமாக நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் பணிகள் மும்முரமாக நடக்கிறது. ரெயில் நிலையத்தின் முதலாவது மற்றும் 2-வது நடைமேடைக்கு பயணிகள் நடைபாதை மேம்பாலம் வழியாக செல்வதற்கு பதிலாக ‘லிப்ட்’டில் செல்லும் வகையில் 2 லிப்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் காத்திருக்கும் அறை புதிதாக கட்டப்படுகிறது. ரெயில் நிலையத்தில் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் புதுக்கோட்டை ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments