அறந்தாங்கியில் பஸ் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்கள் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை




அறந்தாங்கியில் பஸ் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் கூட்டம் அதிகம்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்கள் வரக்கூடிய நேரம் அறிந்து அதனை பயன்படுத்தி கொள்கின்றனர். மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் மற்றும் மகளிருக்கு இலவச பயணம் என்பதால் குறிப்பிட்ட அந்த பஸ்களில் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் 50 சதவீதம் மாணவர்கள் மட்டும் மேற்கண்ட பஸ்களை தவிர்த்து அடுத்தடுத்து வரும் தனியார் பஸ்களில் செல்கின்றனர். இதைத்தவிர பள்ளி நேரங்களில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளி செல்ல முடியாமல் போய்விடுமோ என்னும் அச்சத்திலும் பல மாணவர்கள் முன் கூட்டியே கிளம்பி தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர்.

பஸ் நிறுத்தங்களில் குவிகின்றனர்

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளுக்கு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கம்மங்காடு, வீரமங்களம், இடையார் வழியாக வரும் மாணவ-மாணவிகள், வேட்டனூர், மாணூர், கீழ்குடி, மாணவநல்லூர், நாகுடி வழியாக வரும் மாணவ-மாணவிகள், ஆவுடையார்கோவிலில் இருந்து பனையவயல், வாராந்தி, கிடங்கிவயல் நாகுடி வழியாக சுப்பிரமணியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், சிங்கவனம், காரக்கோட்டை, பூந்தோட்டம், திருவாப்பாடி வழியாக அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் அதே நேரத்திலேயே பஸ் நிறுத்தங்களில் குவிகின்றனர்.

பயணிகள் கோரிக்கை

இதனால் அவர்கள் அரசு மற்றும் ஒரு சில குறிப்பிட்ட தனியார் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் செல்ல வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. பஸ்களில் உள்ளே இடம் இருந்தாலும் உள்ளே நகர்ந்து சென்று படியில் தொங்காமல் வர கண்டக்டர் வழி வகுத்து தந்தாலும் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் மாணவர்களின் ஆர்வம் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மாணவர்களின் இது போன்ற செயல்கள் பலருக்கும் மனவேதனையை ஏற்படுத்துகிறது. பஸ்களில் பிரேக் பிடிக்கையிலும், வேகத்தடைகளிலும் ஏறி நிற்கும் போது, மற்ற வாகனங்களை முந்திச் செல்லும் போதும், வளைவுகளில் திரும்பும் போதும் விபத்துக்கு வழிவகுக்கும். இதனால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ளது. மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்வது குறித்து பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் காலை மற்றும் மாலை ேநரங்களில் போலீசார் இதுகுறித்து கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments