தென்மேற்கு பருவமழை: தமிழ்நாட்டில் இயல்பை விட 19 சதவீதம் மழை அதிகம் வானிலை ஆய்வு மையம் தகவல்




தமிழ்நாட்டின் தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பைவிட 19 சதவீதம் அதிகமாக மழை கிடைத்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

ஒவ்வொரு ஆண்டும் 2 பருவமழை காலங்களில் மழை கிடைக்கிறது. இதில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் இருக்கும்.

தமிழ்நாடு, புதுச்சேரியை பொறுத்தவரையில், ஆண்டு மழைப் பொழிவில் தென் மேற்கு பருவமழை காலத்தில் 32.8 செ.மீ. மழையையும், வடகிழக்கு பருவமழை காலத்தில் 44.2 செ.மீ. மழையையும் இயல்பாக பெறுகிறது. இதில் ஒரு சில ஆண்டுகளில் கூடுதலாகவும், குறைவாகவும் மழை கிடைக்கிறது. அதிலும் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை தமிழ்நாடு, புதுச்சேரி பெறுவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை...

ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல மழை பெய்த நிலையில், ஆகஸ்டு மாதம் இறுதியில் இருந்து செப்டம்பர் மாதம் 3-வது வாரம் வரை எதிர்பார்த்த மழை இல்லை. கோடை காலத்தில் இருக்கிறோமா? என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு வெயில் இந்த காலகட்டத்தில் வாட்டி வதைத்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவர கணக்கின்படி, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் தென் மேற்கு பருவமழை காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால் தென் மேற்கு பருவமழை என்பது அக்டோபர் 2 அல்லது 3-வது வாரத்தில் விலகும். இருப்பினும் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை பெய்யக் கூடிய மழை அளவைதான் தென்மேற்கு பருவமழை காலத்தில் இதுவரை கணக்கில் கொள்ளப்பட்டு வருகிறது.

இயல்பைவிட 19 சதவீதம் அதிகம்

அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி, இயல்பான மழை அளவான 32.3 செ.மீ.யை விட 19 சதவீதம் அதிகமாக, அதாவது 38.4 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக நெல்லையில் இயல்பைவிட 247 சதவீதம் அதிகமாக மழை பெய்து இருக்கிறது. அதற்கடுத்தபடியாக தேனி, ராணிப்பேட்டை, நீலகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வருகின்றன. இந்த பட்டியலில் இயல்பைவிட குறைவாக நாகப்பட்டினம், தர்மபுரி, நாமக்கல், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மழையை பெற்றுள்ளன. புதுச்சேரியை பொறுத்தவரையில் இயல்பைவிட 45 சதவீதம் அதிகமாகவும், காரைக்காலில் 42 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பைவிட 8 சதவீதம் அதிகமாக மழை பெய்து இருந்தது. அதாவது, 35.4 செ.மீ. மழை கிடைத்திருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை சற்று அதிகமாகவே பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை

நடப்பாண்டுக்கான தென்மேற்கு பருவமழை விலகுவது தொடர்பான அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் தற்போது காற்றின் திசை மாறுபட்டு வடகிழக்கு திசையில் இருந்து வீசத்தொடங்கியிருப்பதாகவும், விரைவில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமாக சூழல் நிலவ வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, அக்டோபர் 17, 18-ந்தேதிகளில் பருவமழை தொடங்க உள்ளதாகவும், சாதகமான சூழல் முன்கூட்டியே நிகழும் பட்சத்தில் பருவமழை முன்கூட்டியே ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments