பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள்




பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

பிறப்பு சான்றிதழ்

பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறப்பு 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்புச் சான்றிதழ் பெற பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் 1969 வழிவகை செய்கிறது. அக்குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ் மட்டுமே முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும். பெயர் இல்லா பிறப்புச் சான்றிதழினால் அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் எந்த பயனும் இல்லை. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு , இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.

டிசம்பர் 31-ந் தேதி கடைசி

12 மாதங்களுக்குப்பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200 மட்டும் தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரினைப் பதிவு செய்திட இயலாது. குழந்தை பிறந்து 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக, தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் (01.01.2020 முதல் 31.12.2024 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

1.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தையின் பெயர் வைத்து பிறப்புச் சான்றிதழ் பெற வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி கடைசி நாளாகும். மேற்க்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments