வடகிழக்கு பருவமழை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்




வடகிழக்கு பருவமழை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இயல்பைவிட அதிகம்

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பைவிட 18 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை காலத்தில் 8 சதவீதம் இயல்பைவிட மழை அதிகமாக பெய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் மழை சற்று அதிகம் கிடைத்துள்ளது.

நெல்லையில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பாகவும், 6 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் தென்மேற்கு மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை இன்னும் முற்றிலும் விலகாத சூழலில், வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? எந்த அளவுக்கு மழை இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், தமிழ்நாடு, கேரளா, தெற்கு கர்நாடகா, ராயல்சீமா மற்றும் ஆந்திராவில் இயல்பைவிட மழை அதிகமாக பெய்யக் கூடும். அதாவது, இயல்பைவிட 112 சதவீதம் வரை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது. இதில் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், தென் மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பைவிட குறைவாகவும் மழை பதிவாக வாய்ப்பு இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மழைக்கான வாய்ப்பு இருப்பதால், தீபாவளியையொட்டியும் மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும்?
குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில் இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) சில இடங்களிலும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) முதல் 7-ந்தேதி வரை அனேக இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை மறுதினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 5-ந்தேதி (சனிக்கிழமை) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments