ஒரு பெண் குழந்தை பெயரில் இரு கணக்குகள்: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முறைகேடான கணக்குகள் நீக்கம் மத்திய அரசு நடவடிக்கை




கூடுதல் வட்டி கிடைப்பதால் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முறைகேடாக ஒரு பெண் குழந்தை பெயரில் தொடங்கப்பட்ட இரு சேமிப்பு கணக்குகளில் ஒன்றை நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்

சுகன்யாக சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தையின் நலனுக்காக மத்திய அரசால் கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறுசேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஒருவேளை முதல் பிரசவத்திலோ அல்லது 2-வது பிரசவத்திலோ இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் 2-க்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்கலாம்.

இந்த திட்டம் பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் கிடைக்கும் மாதாந்திர உதவித்தொகையை கூட பல தாய்மார்கள் இந்த திட்டத்தின் கீழ் சேமித்து வருகின்றனர்.

முறைகேடாக இரு சேமிப்பு கணக்குகள்

வங்கிகள், தபால் அலுவலகங்களில் நிரந்தர, தொடர் வைப்புத்தொகை போன்றவற்றுக்கு வழங்கப்படும் வட்டியை விட கூடுதல் வட்டி வழங்கப்படுவதால் ஒரே குழந்தையின் பெயரில் இரு கணக்குகள் தொடங்கப்படுவது அதிகரித்து வந்தது.

குறிப்பாக அந்த குழந்தையின் தாய், தந்தை என இருவரும் தனித்தனியாக இரு கணக்குகளை தொடங்கி சேமிப்பை தொடர்ந்து வருகின்றனர். சில குடும்பங்களில் குழந்தைகளின் தாத்தா, பாட்டி போன்றோர் குழந்தைகளின் பெயரில் கணக்குகளை தொடங்கி உள்ளனர்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தையின் பெயரில் ஒரே ஒரு சேமிப்பு கணக்குதான் தொடங்கப்பட வேண்டும் என 2019-ம் ஆண்டு மத்திய அரசு விதிமுறையை கொண்டு வந்துள்ளது. அதையும் மீறி இந்த திட்டத்தில் கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதற்காக முறைகேடாக சேமிப்பு கணக்குகள் தொடங்கப்படுவதால் அதனை முறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.

நீக்க உத்தரவு

அதன்படி, செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தையின் பெயரில் ஒரே ஒரு சேமிப்பு கணக்குதான் இருக்க வேண்டும் என்றும், மாறாக இரு சேமிப்பு கணக்குகள் இருக்கும்பட்சத்தில் அதில் ஒரு சேமிப்பு கணக்கை திரும்பப்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

அதுமட்டுமல்லாமல் தபால் அலுவலகங்கள், வங்கிகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள முறைகேடான கணக்குகளை அக்டோபர் 1-ந் தேதிக்குள் நீக்க உத்தரவிட்டது. அதன்படி, முறைகேடாக தொடங்கப்பட்ட ஏராளமான செல்வமகள் சேமிப்பு கணக்குகளை தபால் அலுவலகங்கள், வங்கி நிர்வாகங்கள் நீக்கி உள்ளன.

வட்டி கிடையாது

இதுகுறித்து தபால்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு குழந்தையின் பெயரில் இரு கணக்குகள் இருப்பது தெரியவந்தால் அதில் ஒரு கணக்கை நீக்கி விடும்படி பெற்றோர், குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

இதுவரை அதுபோன்ற சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருப்புத்தொகை வேறு சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்படும். ஒருவேளை தாங்களாகவே வந்து இரு கணக்குகளில் ஒரு சேமிப்பு கணக்கை நீக்காதபட்சத்தில் அக்டோபர் 1-ந் தேதி முதல் ஒரு கணக்கிற்கு மட்டுமே 8.2 சதவீத வட்டி கணக்கிடப்படும். மற்றொரு கணக்கிற்கு எந்தவித வட்டியும் கணக்கிடப்படாது' என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments