புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அம்ருத் திட்ட வளர்ச்சி பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் மதுரை கோட்ட மேலாளர் தகவல்




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அம்ருத் திட்ட வளர்ச்சி பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் என மதுரை கோட்ட மேலாளர் தெரிவித்தார்.

வளர்ச்சி பணிகள்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அம்ருத் திட்டத்தில் ரூ.8 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரெயில் நிலையத்தில் லிப்ட்டுகள் அமைத்தல், நுழைவுவாயில் அமைத்தல், பயணிகள் காத்திருப்பு அறை புதிதாக கட்டுதல், நடைமேடைகளில் மேற்கூரைகள் முழுமையாக அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சரத்ஸ்ரீவஸ்தவா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதற்காக அவர் மதுரையில் இருந்து சிறப்பு ரெயிலில் புதுக்கோட்டை ரெயில் நிலையம் வந்தார். அவருடன் ரெயில்வே அதிகாரிகளும் உடன் வந்தனர்.

பாம்பன் புதிய பாலம்

ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவஸ்தவா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்களில் அம்ருத் திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் வளர்ச்சி பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிக்கப்படும். பாம்பன் புதிய ரெயில்வே பாலத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்ததும் விரைவில் திறக்கப்படும்.

சிறப்பு ரெயில்கள்

தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை வழியாகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பாம்பன் பால பணிகள் நிறைவடைந்து ராமேசுவரம் ரெயில் நிலையம் திறக்கப்பட்டதும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடம் சேதமடைந்திருப்பது சரி செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments