தொண்டி கடற்கரையில் 300 கிலோ கஞ்சா பதுக்கல் இலங்கைக்கு கடத்த முயற்சியா? போலீசார் விசாரணை




தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் பதுக்கிய 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை இலங்கைக்கு கடத்த முயற்சியா? என விசாரிக்கின்றனர்.

300 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது எம்.ஆர்.பட்டினம் கடற்கரை. இங்கு தனியாருக்கு சொந்தமான ராயல் பீச் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கடற்கரை ஓரத்தில் நேற்று கஞ்சா மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தொண்டி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மூடை, மூடையாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இவை சுமார் 300 கிலோ என கூறப்படுகிறது. இந்த கஞ்சா மூடைகளை அங்கு பதுக்கிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இலங்கைக்கு கடத்தல்?

கைப்பற்றப்பட்ட கஞ்சா மூடைகளை ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே கடலோர காவல்படை, தொண்டி போலீசார், கியூ பிராஞ்ச் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூட்டாக சேர்ந்து கடற்கரை புதர்களில் மேலும் கஞ்சா மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளனவா? எனவும் தீவிர சோதனை நடத்தினர்.

ஆனால் ஏற்கனவே பறிமுதல் செய்ததை தவிர வேறு எதுவும் போலீசாரின் சோதனையில் சிக்கவில்லை. மூடைகளில் வைக்கப்பட்டு இருந்த கஞ்சாவை, மர்மநபர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றனரா? அல்லது இதே பகுதியில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்தனரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments