புதுக்கோட்டையில் மழைநீரில் சிக்கிய ஆட்டோ கைக்குழந்தையுடன் பெண்ணை பொதுமக்கள் மீட்டனர்




புதுக்கோட்டையில் மழைநீரில் சிக்கிய ஆட்டோவில் இருந்த கைக்குழந்தையுடன் பெண்ணை பொதுமக்கள் மீட்டனர்.

மழைநீரில் ஆட்டோ சிக்கியது

புதுக்கோட்டை மாநகரில் நேற்று முன்தினம் இரவு சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. இந்த நிலையில் வடக்கு 4-ம் வீதி அருகே உள்ள மாப்பிள்ளையார்குளம் நிரம்பி, அதில் இருந்து தண்ணீர், மழைநீர், கழிவுநீரோடு கலந்து வீதிகளிலும், சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வடக்கு 4-ம் வீதியில் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று, சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் சிக்கியது. தொடர்ந்து ஆட்டோவை டிரைவரால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் மழையும் பெய்துக்கொண்டிருந்தது, தண்ணீரின் ஓட்டமும் அதிகமாக இருந்தது. இதில் அந்த ஆட்டோவில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் உள்ளிட்டவர்கள் இறங்க முடியாமல் தவித்தனர்.

வீடியோ வைரல்

இந்த நிலையில் சாலையில் மழைநீரில் ஆட்டோ சிக்கியதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் விரைந்து சென்றனர். ஆட்டோவில் இருந்த கைக்குழந்தையை முதலில் மீட்டு அருகில் இருந்த பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். அதன்பின் பெண் உள்ளிட்டவரை மீட்டு, சாலையின் அருகே பாதுகாப்பான இடத்திற்கு கைதாங்கலாக பிடித்து அழைத்து வந்தனர்.

மழைநீரில் சிக்கிய ஆட்டோவை தள்ளி சற்று நகர்த்தி கொண்டு வந்தனர். மழைநீரில் சிக்கிய ஆட்டோவில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதை அப்பகுதியில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மழைநீரில் சிக்கிய ஆட்டோவில் இருந்தவர்கள் மீட்டகப்பட்டதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments