தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் அமைக்க 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அனுமதியின்றி வைத்தால் குற்றவியல் நடவடிக்கை




தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் அமைக்க 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அனுமதியின்றி வைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பட்டாசு கடைகள்

வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் விதிகளின் நிபந்தனைகளின் படி இணையதளம் வழியாக மட்டும் வருகிற 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். மேற்படி விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், விண்ணப்பதாரரின் இருப்பிட முகவரிக்கான ஆதாரம், கடை வைக்கப்படும் இடத்தின் முகவரிக்கான ஆதாரம், பான் கார்டு-ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை- ஓட்டுனர் உரிமம் இணைக்கப்பட வேண்டும்.

19-ந் தேதிக்குள் விண்ணப்பித்தல்

உரிமக் கட்டணம் ரூ.600-ஐ இ-செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச் சீட்டு அசல், சொந்த கட்டிடம் எனில் பட்டா நகல், வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம் (பட்டாசுக்கடை நடத்த சம்மதம் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்) குத்தகை நிலம் எனில் குத்தகை ஆவணம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இடத்திற்கான வரி ரசீது இணைக்கப்பட வேண்டும்.

சுய உறுதிமொழிப் பத்திரம். கட்டிட அமைவிட வரைபடம், கட்டிட திட்ட அனுமதி இணைக்கப்பட வேண்டும். மேற்கண்ட விண்ணப்பங்களை வருகிற 19-ந் தேதிக்குள் மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேற்படி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

குற்றவியல் நடவடிக்கை

மேலும் அனுமதியின்றி உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நேர்வில், தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments