புதுக்கோட்டையில் `சவர்மா' சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி-மயக்கம் கெட்டுப்போன இறைச்சி இருந்ததால் கடைக்கு ‘சீல்’




புதுக்கோட்டையில் `சவர்மா' சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. கெட்டுப்போன இறைச்சி இருந்ததால் கடைக்கு உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

சவர்மா

புதுக்கோட்டையில் புதுக்குளம் அருகே கீழ 4-ம் வீதியில் சவர்மா கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கிம் (வயது 49) சவர்மா வாங்கியிருக்கிறார். இதனை அவரும், அவரது மனைவி சர்மிளா பானு (40), மகள் சுமையா ரிஸ்வான் (18), மகன்கள் அப்துல் அஸ்லாம் (7), அப்துல் ரகுமான் (7) ஆகியோர் சாப்பிட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் அவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. அவர்கள் 5 பேருக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று காலை அப்துல் ஹக்கிம் குடும்பத்தினர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைக்கு ‘சீல்’

இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீண்குமார் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட சவர்மா கடையில் சோதனை நடத்தினர். இதில் கடையின் உள்ளே பிரீசர் பெட்டியில் மசாலா கலந்த நிலையிலும், மசாலா கலக்காத நிலையிலும் கெட்டுப்போன சிக்கன் இறைச்சி 7 கிலோ இருந்தது.

இதையடுத்து அந்த சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்ய பயன்படுத்தியதற்காக அந்த கடைக்கு ‘சீல்’ வைத்தனர். அந்த கடையை நடத்தி வந்த யூசுப் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை பினாயில் ஊற்றி அழித்தனர்.

வாட்ஸ்-அப் எண்

மேலும் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீண்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘சவர்மா” சாப்பிட்ட 5 பேரும் சிகிச்சையில் நல்ல நிலையில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகளில் வெளிப்புறத்தில் வைத்து சவர்மா விற்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கெட்டுப்போன உணவு விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்பு துறைக்கு 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்'' என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments