தீபாவளி பண்டிகையை மக்கள் சொந்த ஊரில் கொண்டாட வசதியாக தமிழ்நாடு அரசு 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது. 28 முதல் 30-ந் தேதி வரை இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை கொண்டாட வசதியாக மறுநாள்(1-ந்தேதி) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 நாட்கள் விடுமுறை
அதற்கு அடுத்ததாக சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் தொடர்ந்து4 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி,கல்லூரிகளுக்கும் விடுமுறை ஆகும்.
பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பெரும்பாலானவர்கள் செல்வது வழக்கம். தீபாவளிக்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், ரெயில்களில் முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்றுத்தீர்ந்து விட்டன. ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் அரசு பஸ்களையே நம்பி உள்ளனர்.
ஆலோசனை
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந்தேதி வரையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் இயக்கக்கூடிய 2,092 பஸ்கள் (3 நாட்களுக்கு 6,276) மற்றும் 4,900 சிறப்பு பஸ்கள் என 11 ஆயிரத்து 176 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மற்ற இடங்களுக்கு இதே நாட்களில் 2,910 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 14 ஆயிரத்து 86 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பண்டிகை முடிந்த பின்பு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு நவம்பர் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 3,165 சிறப்பு பஸ்கள் என 9,441 பஸ்கள் மற்றும் பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 12 ஆயிரத்து 606 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
எந்தெந்த மார்க்கம்?
சென்னையிலிருந்து 28-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை குறிப்பிட்ட சில பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாகவும்;
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாகவும்;
மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் வழக்கமாகவும், திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாகவும் பஸ்கள் இயக்கப்படும்.
சென்னை பகுதிகளில் இருந்து கார் மற்றும் இதர வாகனங்களில் ஊருக்குச் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்துவிட்டு திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல வேண்டும்.
முன்பதிவு மையங்கள்
தீபாவளி பயணத்திற்காக 28-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை முன்பதிவு மையங்கள் இயங்கும். அந்த வகையில், கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் 2 முன்பதிவு மையங்களும் இயக்கப்படும்.
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கட்டுப்பாட்டு அறை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் 9445014436 என்ற செல்போன் எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு 18004256151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையும் 24 மணி நேரமும் செயல்படும்.
பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகள் பஸ்களின் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள பல்வேறு இடங்களில் தகவல் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பஸ் நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, ஆணையர், போலீஸ் துறை உயர் அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.