புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற உறுதி மொழிக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தினர்.

உறுதிமொழிக்குழு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழுவின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. (பண்ருட்டி) தலைமையில் உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான அரவிந்த் ரமேஷ் (சோழிங்நல்லூர்), சீனிவாசன் (விருதுநகர்), மாங்குடி (காரைக்குடி), மோகன் (அண்ணாநகர்) ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் அருணா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையின் புதிய கட்டிட பணிகளையும் பார்வையிட்டனர். மேலும் புதிய கட்டுமான பணியில் சில குறைகள் இருந்ததை குழுவினர் சுட்டிக்காட்டி சரி செய்ய அறிவுறுத்தினர்.

அரசு மருத்துவக்கல்லூரி

இதேபோல மழையூரில் காவலர் குடியிருப்பு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகளை முறையாக சுத்திகரிக்காமல் அருகில் உள்ள கிராமத்திலே விடப்படுவதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டிடங்கள் சேதம், விரிசல் தொடர்பானதை பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனையில் கழிவறைகளை சுகாதாரமாக வைக்க அலுவலர்களுக்கு குழுவினர் அறிவுறுத்தினர்.

மாணவிகள் விடுதி

அதன்பின்னர் திருவப்பூரில் உணவு பொருள் சேமிப்பு கிடங்கையும், ஆதிதிராவிடர் அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து புதுக்கோட்டையில் ஒரு ஓட்டலில் அதிகாரிகளுடன் இக்குழுவினர் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். அப்போது அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு குழுவினர் அறிவுறுத்தினர். கூட்டத்திற்கு பின் குழு தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 296 உறுதிமொழிகளில், 152 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டன. நீதிமன்ற வழக்குகள், திட்ட மதிப்பீடு அதிகம் உள்ளிட்ட காரணங்களால் 50 சதவீத உறுதிமொழிகள் நிலுவையில் இருக்கின்றன. இதனையும் விரைந்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய மாவட்டம்

மற்ற மாவட்டங்களை விட புதுக்கோட்டை மாவட்டம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது இந்த மாவட்டமும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாறும். சட்டசபையில் அறிவிக்கப்படும் மக்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இத்திட்டங்கள் காலதாமதமாக கூடாது என்பதற்காக ஆய்வு மேற்கொள்வது இந்த குழுவின் பணியாகும். அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தான் இந்த குழுவின் நோக்கம். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவுகளை வெளியேற்ற ரூ.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க அறிவுறுத்தப்படும். தைல மரங்களை ஆய்வு மேற்கொள்ள வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு கலெக்டர் 2 மாதத்திற்குள் அறிக்கை அளிக்க கூறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments