மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 1,561 வாக்குச்சாவடி மையங்களிலும் நடக்கிறது.

இம்முகாமில் 1.1.2025 அன்றோ அதற்கு முன்போ 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் (31.12.2006 முன்னர் வரை பிறந்தவர்கள்) மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐயும், நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய படிவம் 8-ஐயும், அதற்குரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்கள்

இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 17 வயதை பூர்த்தி அடைந்தவர்களும் (அதாவது 30.9.2007 வரை பிறந்தவர்கள்) 1.04.2025, 1.07.2025 மற்றும் 1.10.2025 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாக கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

வாக்காளர்களுக்கு தேவையான படிவங்கள் அந்தந்த பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களிலும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும், தாசில்தார் அலுவலகங்களிலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் வருகிற 28-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள்

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற செயலிலும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு வயது ஆதாரத்திற்காக பிறப்பு சான்றிதழ், பள்ளி மதிப்பெண் சான்றிதழ், இந்திய கடவுச்சீட்டு, பான் காா்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒரு ஆவணங்கள் மற்றும் இருப்பிடத்தின் ஆதாரத்திற்காக தண்ணீர், மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, வங்கி, அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகம், பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம் இவைகளை பயன்படுத்தி புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் வருகிற 23, 24-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments