ஆவுடையார்கோவில் அருகே மீமிசல் சாலையில் கருப்பூர் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடைகள் அமைப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே மீமிசல் சாலையில் கருப்பூர் பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைனாக்குடி கிராமத்தை சேர்ந்த வீரப்பன் (வயது 50) என்பவர் கருப்பூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை வரை உள்ள நெடுஞ்சாலையில் 25-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து நடக்காமல் உள்ளது. ஆனால் ஆவுடையார்கோவிலில் இருந்து மீமிசல் வரை உள்ள 22 கிலோ மீட்டர் சாலையில் வேகத்தடைகள் அதிகம் இல்லை. இதனால் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நடந்து வருகிறது.

 எனவே கருப்பூரில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ஆவுடையார்கோவில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் உத்தரவின் பேரில், சாலைப் பணியாளர்கள் கருப்பூர் பஸ் நிறுத்தத்தில் 2 புறமும் வேகத்தடைகளை அமைத்தனர். மேலும் கோரிக்கையை ஏற்று வேகத்தடை அமைத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும், சாலை பணியாளர்களுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments