சேதுபாவாசத்திரம் அருகே பயங்கரம் அரசு பள்ளிக்கூடத்தில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை




சேதுபாவாசத்திரம் அருகே பயங்கரம் அரசு பள்ளிக்கூடத்தில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வெறிச்செயல் சேதுபாவாசத்திரம் அருகே அரசு பள்ளிக்கூடத்தில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார். திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னைமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி ராணி. இவர்களுடைய மூத்த மகள் ரமணி(வயது 24). எம்.ஏ., பி.எட். பட்டதாரி.

அரசு பள்ளி ஆசிரியை

இவர், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி தற்காலிக தமிழ் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.

6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தமிழ் பாடம் நடத்தி வந்தார்.

காதல்

அதே ஊரைச்சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் மகன் மதன்குமார்(30). இவர், பத்தாம் வகுப்பு வரை படித்த நிலையில் சிங்கப்பூரில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றினார். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு ஊருக்கு திரும்பி மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள் என்பதால் ரமணிக்கும், மதன்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

பெண் கேட்டு சென்றனர்

இதற்கிடையில் மதன்குமாரின் பெற்றோர் தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வந்தது. இந்த நேரத்தில் தனது பெற்றோரிடம் தான் ரமணியை காதலித்து வரும் தகவலை தெரிவித்த மதன்குமார், திருமணத்திற்காக ரமணியை பெண் கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் கேட்டு ரமணி வீட்டிற்கு மதன்குமாரின் பெற்றோர் சென்றனர்.

பேசுவதை தவிர்த்தார்

அப்போது ரமணியின் உறவினர் ஒருவர், மதன்குமாரின் பழக்க, வழக்கம் சரியில்லை என கூறியதால் ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்கு பெண் கொடுக்க விருப்பமில்லை எனவும், வேறு பெண்ணை பார்த்து அவருக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றும் கூறிவிட்டனர்.

அதன்பிறகு ரமணியும், மதன்குமாரிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். ஆனால் ரமணியை மதன்குமார் பலமுறை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.

தீர்த்துக்கட்ட முடிவு

நேற்று முன்தினம் மீண்டும் ரமணியை சந்தித்து பேசிய மதன்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அப்போது அவரை ரமணி கடுமையாக திட்டியதுடன் தன்னிடம் இனிமேல் இதுதொடர்பாக பேச வேண்டாம் எனவும் கோபமாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

தன்னிடம் ஆசை, ஆசையாக பழகி விட்டு தற்போது தன்னிடம் சரிவர பேசாதது மற்றும் திருமணத்திற்கு மறுத்தது ஆகிய காரணத்தால் ரமணி மீது மதன்குமார் கடும் கோபத்தில் இருந்து வந்தார். தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என அவரை தீர்த்து கட்ட முடிவு செய்த மதன்குமார் அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தார்.

சரமாரி கத்திக்குத்து

நடக்கப்போகும் விபரீதத்தை உணராத ரமணி நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்றார். அதுவே தனது கடைசி பயணம் என்பது அவருக்கு தெரியவில்லை. பள்ளிக்கு சென்ற ரமணி முதல் பாடவேளையில் தனக்கு வகுப்பு இல்லை என்பதால் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையில் அமர்ந்து இருந்தார்.

பள்ளி தொடங்கியதும் சில ஆசிரியர்கள் பாடம் நடத்த வகுப்பறைக்கு சென்று விட்டனர். காலை 10.10 மணி அளவில் மதன்குமார் பள்ளிக்கு வந்தார். அவர் ஓய்வு அறையில் இருந்த ரமணியை சந்தித்து மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார்.

ஆனால் ரமணி பிடிவாதமாக உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதுடன் உடனடியாக பள்ளியை விட்டு வெளியே செல்லும்படி மதன்குமாரிடம் ஆவேசமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற மதன்குமார், தான் மறைத்து வைத்து இருந்த மீன்வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு ரமணியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இந்த திடீர் தாக்குதலை ரமணி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் கழுத்தில் கத்திக்குத்து பட்டதும் நிலைகுலைந்து போனார்.

வலி தாங்காமல் சத்தம் போட்டார்

மேலும் ரமணியின் வயிற்று பகுதியிலும் மதன்குமார் கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்னர் அங்கிருந்து மதன்குமார் தப்பியோட முயன்றார். கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் கத்திக்குத்து விழுந்ததும் வலி தாங்க முடியாமல் ரமணி சத்தம் போட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்களும், மாணவர்களும் அங்கு ஓடி வந்தனர். அப்போது அவர்கள் கத்தியோடு தப்பி ஓடிய மதன்குமாரை விரட்டிச்சென்றனர்.

மடக்கி பிடித்தனர்

அவர்களுடன் சேதுபாவாசத்திரம் போலீசாரும் ஓடி வந்து மதன்குமாரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை விசாரணைக்காக சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பரிதாப சாவு

கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமணியை மாணவர்களும், ஆசிரியர்களும் தூக்கிக் கொண்டு பள்ளிக்கு வெளியே வந்து ஆம்புலன்ஸ்சில் ஏற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கைது

இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியை கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ ஆகியோர் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் பேராவூரணி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து ஆசிரியை ரமணியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

கத்திக்குத்தில் கொலை செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கத்திக்குத்தில் கொலை செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியை கொலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ரமணி பள்ளி வளாகத்தில் இருந்தபோது, மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.

பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும்.

பேரிழப்பு

கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ரமணியின் உயிரிழப்பு பள்ளிக்கல்வித்துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ரமணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, ரமணியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments