கனமழை
புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியான கோட்டைப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கோட்டைப்பட்டினம் பகுதியில் சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இதனை சரி செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேங்கி நின்ற மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடல்சீற்றம்
இந்த மழையால் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டது. கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்த மீனவர்கள் தங்கள் பிடித்த மீன்களை படகில் இருந்து கரையில் இறக்க முடியாமல் தவித்தனர். வியாபாரிகளும் மீன்களை வாங்கி எடை போட முடியாமல் தவித்தனர். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இதனால் மீனவர்கள் தங்கள் பிடித்து வரும் மீன்களை கரையில் இறக்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இதனால் கடல் ஓரங்களில் அரசு தடுப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர்.
கறம்பக்குடி பகுதியில்...
கறம்பக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தது. சில நேரங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கறம்பக்குடி, மழையூர், ரெகுநாதபுரம், வெட்டன் விடுதி, திருமணஞ்சேரி, அம்புக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். ஒரு சில பகுதிகளில் வீடுகளின் முன்பும் தண்ணீர் தேங்கியது. இதனால் வெளியே வர முடியாமல் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டனர். கறம்பக்குடி பஸ் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் பயணிகள் தவித்தனர். ஏற்கனவே தண்ணீர் தேங்கியதால் புதிதாக சிமெண்டு தளம் அமைக்கப்பட்ட நிலையில் நேற்று பெய்த மழையில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. ரெகுநாதபுரம் பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
காரையூர், கந்தர்வகோட்டை
காரையூர் சுற்றுவட்டார பகுதியான ஒலியமங்கலம், மறவாமதுரை, சடையம்பட்டி, எம்.உசிலம்பட்டி, சூரப்பட்டி, முள்ளிப்பட்டி, மேலத்தானியம், நல்லூர், அரசமலை, நெருஞ்சிகுடி, சேரனுர், இடையாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கலெக்டர் ஆய்வு
மணமேல்குடி அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் மணமேல்குடி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
நாட்டுப் படகு மீனவர்கள் பலத்த காற்றினால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்ந்து கடற்கரை பகுதியில் கனமழை பெய்ததால் குலச்சிறையார் நகர், உச்சமா காளியம்மன் கோவில் நகர் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கிய பகுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுந்தரவல்லி, மாவட்ட கலெக்டர் அருணா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர், அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்ற உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அப்போது வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மணமேல்குடி தாசில்தார் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை
புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை மேக மூட்டமாக இருந்தது. பின் இரவு 8 மணி முதல் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அதை தொடர்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் பெய்தது. மேலும் நேற்று காலையிலும் மழை பெய்தவண்ணம் இருந்தது. இதனால் காலை 7 மணி வரை வெளிச்சம் வரவில்லை. இந்த தொடர்மழை மதியம் 12 மணிவரை இடைவிடாது பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. மக்களின் அன்றாட பணிகள் தடைபட்டது. இந்த தொடர் மழையினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மழை அளவு விவரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவிலில் அதிகப்படியாக 74.8 மி.மீ. மழை பெய்துள்ளது. நேற்று காலை 6.30 மணி வரை மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- ஆதனக்கோட்டை- 27, பெருங்களூர்- 34, புதுக்கோட்டை- 24.60, ஆலங்குடி- 27.20, கந்தர்வகோட்டை- 32.60, கறம்பக்குடி- 21.50, மழையூர்- 14, கீழாநிலை- 8.30, திருமயம்-18.50, அரிமளம்-15, அறந்தாங்கி-33.20, ஆயிங்குடி-26.20, நாகுடி- 33.60, மீமிசல்- 40.60, மணமேல்குடி- 44.40, இலுப்பூர்-20, குடுமியான்மலை- 12.40, அன்னவாசல்- 33.20, விராலிமலை- 34, உடையாளிப்பட்டி- 15.20, கீரனூர்- 35.40, பொன்னமராவதி- 14, காரையூர்- 12.60.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.