பொங்கல் பரிசு தொகுப்புக்காக 4 லட்சத்து 92 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் கலெக்டர் அருணா தகவல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக 4 லட்சத்து 92 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்படுவதாக கலெக்டர் அருணா தெரிவித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகவும், அறுவடை திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிடுமாறு முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க, பரிசு தொகுப்பை குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோக பணி தொடங்கியது.

கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாநகராட்சி, அடப்பன்வயல் 2-ம் வீதி மற்றும் கோவில்பட்டி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோக பணியினை கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு டோக்கன்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4,91,944 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 947 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு என மொத்தம் 4,92,891 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிடும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒத்துழைப்பு

இப்பணிகளின் போது ரேஷன் கடை பணியாளர்களுக்கு குடும்ப அட்டைதாரர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின்போது, தனி தாசில்தார் (குடிமைப்பொருள் வழங்கல்) மனோகரன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அன்னவாசல்

அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்துக்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகள் தோறும் சென்று பயனாளிகளுக்கு வழங்கினர். டோக்கனில் எந்த தேதியில், எந்த நேரத்தில் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டு உள்ளது. பயனாளிகள் அனைவரும் அந்தந்த நாட்களில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments