கஞ்சா கடத்தல் சம்பவங்களை தடுக்க கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் போலீசார் நடவடிக்கை




புதுக்கோட்டையில் கிழக்கு கடற்கரை சாலையில் கஞ்சா கடத்தல் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை

புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை மாவட்டங்களில் ஒன்றாகும். சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் கிழக்கு கடற்கரை சாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடலில் படகு மூலம் செல்ல தூரம் குறைவாகும்.

இதனால் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதி வழியாக கஞ்சா, போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இதனை போலீசாரும் துப்பறிந்து தடுத்து பிடித்து நடவடிக்கை எடுப்பார்கள். இதில் சிக்கும் கஞ்சா அளவு எப்போதும் மூட்டை, மூட்டையாகவும், பண்டல், பண்டல்களாகவும் காணப்படும். இதேபோல் தங்ககட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.

ஆந்திராவில் இருந்து...

இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டை வழியாக கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் கூட இதேபோல் 100 கிலோ எடைக்கு மேல் கஞ்சா பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆலங்குடி, புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர். மேலும் தனிப்படையினரும் ரகசிய தகவலின் அடிப்படையில், கடத்தலுக்காக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பண்டல்களை கைப்பற்றியிருக்கின்றனர்.

இதேபோல் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் காரில் திருச்சி செல்லும் போது சந்தேகப்படியான ஒரு சரக்கு வேனை சோதனையிட போலீசாருக்கு அறிவுறுத்தினார். அதில் காய்கறி மூட்டைகளுக்கிடையே கஞ்சா பண்டல்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும், அதில் தப்பிய குற்றவாளிகள் பின்னர் கைதானதும் குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு கேமராக்கள்

இதற்கிடையில் தற்போது ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணிப்புகளை அதிகப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுமாவடி உள்பட 3 இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதில் கட்டுமாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டன. மற்ற 2 சோதனைச்சாவடிகளிலும் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

கிழக்கு கடற்கரை சாலையில் தேவைப்படுகிற இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் போலீசார் ஆலோசித்து வருகின்றனர். இந்த கேமராக்கள் சுழலும் தன்மை கொண்டதாகும். சோதனைச்சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு தனியாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கவும் போலீசார் திட்டமிட்டிருக்கின்றனர். கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்கவும், சட்டவிரோத செயல்களை தடுக்கவும் கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments