வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை




வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

பரவலாக மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புதுக்கோட்டை மாநகரில் காலை 11 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு, விட்டு பெய்தது. அதன்பின் மதியம், மாலையில் பரவலாக பெய்தது. தொடர்ந்து மழை தூறியது. இந்த மழையினால் சாலைகளில் சென்றவர்கள் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்தப்படி சென்றனர். மேலும் சிலர் மழையில் நனைந்தப்படி சென்றதை காணமுடிந்தது.

ஆவுடையார்கோவில், திருவரங்குளம்

ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ½ மணி நேரம் கன மழை பெய்தது, இந்த மழையால் வீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவரங்குளம், மேட்டுப்பட்டி, கைக்குறிச்சி, திருக்கட்டளை, வேப்பங்குடி மாங்காநாம் பட்டி, பூவரசகுடி, வல்லத்திராக்கோட்டை, கொத்தகோட்டை, வம்பன்நாள் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

மணமேல்குடி

மணமேல்குடி அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குளிர்ந்த காற்றுடன் மழை சீராக பெய்ததால் மணமேல்குடி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

ஆவூர், அரிமளம், காரையூர்...

மாத்தூர், மண்டையூர், ஆவூர், நீர்பழனி, பாக்குடி, பேராம்பூர், குன்னத்தூர், விராலிமலை, கத்தலூர், வேலூர், ராஜகிரி, விளாப்பட்டி, களமாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதைத் தொடர்ந்து லேசாக வெயில் அடிக்க தொடங்கிய நிலையில் காலை 9 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது விராலிமலை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை 5 மணி வரை அவ்வப்போது விட்டு விட்டு மிதமான மலையாக பெய்து வந்தது. பின்னர் கனமழையாக பெய்தது.

அரிமளம் ஒன்றியத்தில் கடையக்குடி, நெய்வாசல் பட்டி, பெருங்குடி, மிரட்டுநிலை அரிமளம், கே. புதுப்பட்டி, கீழாநிலைக்கோட்டை நெடுங்குடி, வாளரமாணிக்கம், ஏம்பல், நமுனசமுத்திரம், கடியாபட்டி, ராயவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. காரையூர், ஒலியமங்கலம், மறவாமதுரை, சடையம்பட்டி, எம்.உசிலம்பட்டி, சூரப்பட்டி, இடையாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்தது.

குளிா்ந்த சீதோஷ்ண நிலை

இதேபோல மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த ஓரிரு நாட்களாக வெயிலின் தாக்கம் புதுக்கோட்டையில் சற்று அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments