அலையாத்தி காடுகளை படகில் சுற்றிப்பார்க்கலாம்: முத்துக்குடா கடற்கரை பகுதியில் சுற்றுலா தலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்






முத்துக்குடா கடற்கரை பகுதியில் சுற்றுலா தலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அலையாத்தி காடுகளை பொதுமக்கள் படகில் சென்று சுற்றிப்பார்க்கலாம்.

முத்துக்குடா

சுற்றுலாத்துறை சார்பில் ரூ.18.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிர்வாகக் கட்டிடம் ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே முத்துக்குடா கடற்கரை பகுதியில் ரூ.3.06 கோடியில் அமைக்கப்பட்ட சுற்றுலா தலத்தையும் அவர் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து முத்துக்குடாவில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா பங்கேற்று குத்துவிளக்கேற்றினார். இந்த சுற்றுலா தலம் உடனடியாக பயன்பாட்டிற்கு வந்தது.

படகு குழாம்

முத்துக்குடா கடற்கரை பகுதியில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. இதனை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் படகு குழாமுடன் இந்த சுற்றுலா தலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் படகுகளில் கலெக்டர் உள்பட அதிகாரிகள் அமர்ந்து கடலில் சிறிது நேரம் பயணம் செய்து அலையாத்தி காடுகளை சுற்றிப்பார்த்தனர். கரைப்பகுதியில் பார்வையாளர்கள் கூடம், நிர்வாக கட்டிடம், வாகன நிறுத்துமிடம், நடைபாதை, கேண்டீன் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.இந்த தொடக்க நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை மண்டல மேலாளர் பிரபுதாஸ், மாவட்ட சுற்றுலா அலுவலர் கார்த்திக், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் (மணமேல்குடி) பரணி கார்த்திகேயன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனியார், மண்டல கணக்கு அலுவலர் சிவதானு, தாசில்தார் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், உதவி சுற்றுலா அலுவலர் முத்துசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படகில் சுற்றிப்பார்க்க கட்டணம் எவ்வளவு?
முத்துக்குடா சுற்றுலா தலத்தில் படகு குழாமில் 3 படகுகள் உள்ளன. இதில் ஒரு படகில் 8 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் உள்ளது. மோட்டாரில் இயங்கும் இந்த படகில் கரையில் இருந்து கடலில் அலையாத்தி காடுகள் உள்பகுதியில் சுமார் ½ மணி நேரம் சுற்றிப்பார்க்கும் வகையில் பயண நேரம் வகுத்துள்ளனர். படகில் சென்று சுற்றிப்பாா்க்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இதில், ஒரு நபருக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments