மணமேல்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு




மணமேல்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் கேட்டு

மணமேல்குடி அருகே காசாங்குடி, சாய்குடி கிராமங்களில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. தங்கள் கிராமங்களுக்கு அடிப்படை தேவையான குடிநீருக்கு வழிவகை செய்யுமாறு பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல் காசாங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியிலும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தாலும் அதற்கு தண்ணீர் வசதி இல்லை. மேலும் அப்பகுதியில் உள்ள பாலம் முழுவதுமாக சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை டிராக்டரில் கொண்டு சென்றால் பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலை மறியல்

எனவே குடிநீர் உள்ளிட்ட பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோாி திருச்சி-ராமேசுவரம் சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் பிரச்சினை தீர்க்க தற்போது லாரிகளில் கொண்டு வந்து குடிநீர் கொடுக்கப்படும் என்று கூறினர். மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போரட்டத்தால் திருச்சி-ராமேசுவரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments