நியோ டைடல் பார்க், கந்தர்வகோட்டை பேரூராட்சி, பொன்னமராவதி நகராட்சி: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்




நியோ டைடல் பார்க், கந்தர்வகோட்டை பேரூராட்சியாகவும், பொன்னமராவதி நகராட்சியாகவும் தரம் உயர்த்தியும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை களமாவூரில் அரசு விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

குகை கோவில்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய திட்டங்கள் தொடர்பாக அறிவித்தார். தொடர்ந்து முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

குகை கோவில்கள், கல்வெட்டுகள், தொல்லியல் சின்னங்கள் என்று நிறைந்து சோழர், பாண்டியர், முத்தரையர், தொண்டைமான்களால் ஆட்சி செய்யப்பட்ட வரலாற்று புகழ்பெற்ற புதுக்கோட்டை மண்ணில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தியாக சீலர்கள்

‘இந்தியை நிறுத்துங்கள்’ என்று அன்றைய முதல்அமைச்சர் பக்தவத்சலத்திற்கும், ‘தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுங்கள்’ என்று பேரறிஞர் அண்ணாவிற்கும் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு உயிர்நீத்தார், கீரனூர் முத்து. நம் உயிரோடு கலந்து, நம்மை இயக்கிக் கொண்டிருக்கக்கூடிய நம் தாய்மொழியான தமிழ்மொழியைக் காக்க நஞ்சுண்டு இறந்தார், விராலிமலை சண்முகம்.

அந்த தியாகச்சீலர்களின் நினைவைப் போற்றும் விதமாக, 1967ல் கீரனூரில் "கீரனூர் முத்து சீரணி அரங்கமும்", திருச்சி பாலக்கரையில் கட்டப்பட்ட பாலத்திற்கு, 2006ல் கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவாக, ‘சின்னச்சாமி  சண்முகம் பாலம்’ என்றும் பெயர் வைத்தவர், கருணாநிதி.

நலத்திட்டங்கள்

இந்த விழாவில் ரூ.766 கோடியில் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருமயத்தில் உருவாகியிருக்கும் ரூ.10 கோடி மதிப்பிலான, அரசு மருத்துவமனையும், அரிமளம் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் சமத்துவபுரமும் திறக்கப்பட்டுள்ளது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல் இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

திருமயத்திலும், ஆலங்குடியிலும் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி அருகே பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படி ஏராளமான திட்டங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

புதிய அறிவிப்புகள்

இத்தனை திட்டங்கள் செய்திருக்கிறோம் என்று திருப்தி அடைபவன் இல்லை நான். இன்னும் இன்னும் செய்ய வேண்டும் என்று ஊக்கம் கொண்டு உழைப்பவன். இங்கு வந்து உங்களை சந்தித்துவிட்டு, புது அறிவிப்புகளை வெளியிடாமல் இருப்பேனா?. இந்த நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை நான் வெளியிட இருக்கிறேன். அதன் விவரம் வருமாறு:

* அறந்தாங்கி வட்டத்தில் இருக்கும் வீரகொண்டான் ஏரி, செங்கலநீர் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

* கீரமங்கலம் பகுதி விவசாயிகளின் நலன் கருதி, அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்திட குளிர்பதன கிடங்கு ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

டைடல் பார்க்

* ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும், விளானூர் ஊராட்சி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடியில் உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும்.

* புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு ஐ.டி. துறையில் வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கு புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.

* கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

* பொன்னமராவதி பேரூராட்சி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

இந்த அறிவிப்புகள் எல்லாம் மிக விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.

மகளிர் சுய உதவிக்குழு

நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களில், இந்த மாவட்டத்தில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 83 சகோதரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 14 கோடியே 16 லட்சம் கட்டணமில்லா விடியல் பயணங்களை பயனாளிகள் மேற்கொண்டுள்ளனர். 14 ஆயிரத்து 446 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அந்த சுய உதவிக் குழுக்களுக்காக இதுவரை ரூ.3 ஆயிரத்து 894 கோடி கடனுதவி தரப்பட்டிருக்கிறது. `இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் மூலமாக 5 ஆயிரத்து 874 உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக 4 லட்சத்து 79 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். 88 ஆயிரம் பெண்கள் மகப்பேறு நிதியுதவி பெற்றிருக்கிறார்கள். `நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்கள் மூலமாக 19 ஆயிரத்து 179 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

வீட்டு மனைப்பட்டா

மாவட்டத்தில் 66 ஆயிரம் மாணவர்களுக்கு தினமும் காலையில் சூடான சுவையான சத்தான உணவு வழங்கப்படுகிறது. 33 ஆயிரத்து 680 மாணவிகளுக்கு மாதந்தோறும் `புதுமைப்பெண்' திட்டத்தின் மூலமாக ரூ.1,000 வழங்கிக் கொண்டிருக்கிறோம். 64 ஆயிரத்து 25 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி இருக்கிறோம். 3 ஆயிரத்து 136 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிக் கொண்டு வருகிறோம்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 44 ஆயிரம் மாணவ  மாணவிகளுக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் முக்கியமாக இதுவரைக்கும், 37 ஆயிரத்து 615 பேருக்கு பட்டா வழங்கி இருக்கிறோம். அதில் இன்றைக்கு மட்டும் 12 ஆயிரத்து 618 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத் அலி, ஆணையர் நாராயணன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணி கார்த்திகேயன், ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் உதயம் சண்முகம் (வடக்கு), பொன்துரை (தெற்கு), அரிமளம் ஒன்றிய செயலாளர்கள் பொன் ராமலிங்கம் (வடக்கு), வி.ஆர். இளையராஜா (தெற்கு), மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரபா, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் ஞான. இளங்கோவன், தெற்கு மாவட்ட மருத்துவரணி தலைவர் சதீஷ், மணமேல்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி.ராமசாமி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன், அரிமளம் பேரூராட்சி தலைவர் மாரிகண்ணு முத்துகுமார், திருமயம் வடக்கு ஒன்றிய செயலாளர் கணேசன், அன்னவாசல் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன், விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன், கறம்பக்குடி நகர செயலாளர் முருகேசன், அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் ஆனந்த், நகர் மன்ற துணைத்தலைவர் முத்து என்கிற சுப்பிரமணியன், அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர் பேபிராணி, ஊராட்சி ஒன்றி ஆணையர் சரவணராஜா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரண்யா, கீழப்பனையூர் ஊராட்சி செயலாளர் ஜெகநாதன், அரிமளம் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, கறம்பக்குடி வடக்கு மாவட்ட பிரதிநிதி வெற்றிவேந்தன், பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், துணை தலைவர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments