சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்: கோபாலப்பட்டிணத்தில் தெருநாய்கள் அட்டகாசம் - ஊராட்சி நிர்வாகம் தூங்குகிறதா? மக்கள் ஆக்ரோஷம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, கோபாலப்பட்டிணத்தில் தெருநாய்களின் அட்டகாசம் எல்லை மீறிச் சென்றுள்ளது. நேற்று முன்தினம் காலையில் மதரஸாவிற்கு தனியாகச் சென்ற சிறுமியை நாய் கடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயத்தில் உறைந்த சிறுமி
கோபாலப்பட்டிணத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 29, திங்கட்கிழமை) காலையில் தெருவில்  மதரஸாவிற்கு சிறுமி நடந்து சென்றபோது, ஆக்ரோஷமாக வந்த தெருநாய் ஒன்று அவரை கடிக்கப் பாய்ந்தது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஒருவர் துரிதமாகச் செயல்பட்டு நாயை விரட்டினர். மயிரிழையில் உயிர் தப்பிய அந்தச் சிறுமி, அதிர்ச்சியில் உறைந்தபடி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றார்.

குப்பை மேடுகளால் குவியும் நாய்கள்
நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணம் பகுதியில், சாலை ஓரங்களில் மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளே இந்த அவல நிலைக்கு முக்கியக் காரணம். குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் தவறியதால், அங்குள்ள கழிவுகளை உண்ண நூற்றுக்கணக்கான நாய்கள் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. இதனால் அந்தப் பாதையில் நடப்பதே உயிருக்கு ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது.

நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகம்
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்:
"ஏற்கனவே பலமுறை நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன. நாய்களைப் பிடிக்கக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், அதிகாரிகள் கும்பகர்ண நித்திரையில் உள்ளனர். அவர்களின் அலட்சியத்தால் நேற்று முன்தினம் ஒரு சிறுமிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் விபரீதம் நடக்கும் வரை காத்திருக்கப் போகிறார்களா?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.

கரூர் ஊராட்சியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்
நமது ஒன்றியத்திற்கு உட்பட்ட கரூர் ஊராட்சியில், கடந்த 23.12.2025 அன்று தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. அதே போன்ற துரித நடவடிக்கையை கோபாலப்பட்டிணத்திலும் மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.


விழிப்புணர்வு அறிவிப்பு
ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளைத் தனியாக வெளியில் அனுப்ப வேண்டாம் என்றும், வெளியில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் GPM மீடியா சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.



குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்: கோபாலப்பட்டிணத்தில் மிரட்டும் தெருநாய்கள் - வேடிக்கை பார்க்கிறதா ஊராட்சி நிர்வாகம்? 

என்ற தலைப்பில் கடந்த 18.12.2025 GPM மீடியாவில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments