புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.




தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தவராகவும் இருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இதில் 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, 12- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ- மாணவிகளுக்கும் ஏற்கனவே இத்திட்டத்தில் உதவித்தொகை பெற்றவர்களுக்கும் இந்த தொகை வழங்கப்பட மாட்டாது.

மாற்றுத்திறனாளிகள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்குக் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000. மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக்கூடாது. இந்த உதவித்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதி உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அனைத்து வேலை நாட்களிலும், வருடம் முழுவதும் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்த உதவித்தொகையை பெறுவதால் அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்றும், அரசு வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது. இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments