எச்சரிக்கை! போக்குவரத்து அபராதம் என்ற பெயரில் பரவும் போலி APK - கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!



தமிழகம் முழுவதும் வாகன உரிமையாளர்களைக் குறிவைத்து 'இ-சலான்' (E-Challan) என்ற பெயரில் நூதன மோசடி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. உங்கள் வாகனத்தின் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதைச் சரிபார்க்க செயலியை (App) நிறுவுமாறும் வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
மோசடி எப்படி நடக்கிறது?
மோசடிக்காரர்கள் அனுப்பும் செய்தியில், உங்களது வாகன எண் மற்றும் போலி அபராத எண் (Challan Number) இடம்பெற்றிருக்கும். உங்கள் அடையாளம் மற்றும் ஆதாரத்தைப் பார்க்க, கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து Traffic Challan (RTO) App-ஐ டவுன்லோட் செய்யவும் என்று அந்தச் செய்தி உங்களைத் தூண்டும். நீங்கள் அந்த லிங்க்கைக் கிளிக் செய்து செயலியை (APK File) டவுன்லோட் செய்தவுடன், உங்கள் கைபேசியின் முழு கட்டுப்பாடும் மோசடிக்காரர்களுக்குச் சென்றுவிடும்.
 
இதன் மூலம் உங்கள் வங்கித் தகவல்கள், OTP மற்றும் தனிப்பட்ட தரவுகளைத் திருடி, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைச் சுருட்டிவிடுவார்கள்.
 
உண்மையான சலானை எப்படிக் கண்டுபிடிப்பது?
செயலி (App)
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செயலி 'mParivahan' மட்டுமே. வேறு எந்தத் தனியார் லிங்க்குகளையும் கிளிக் செய்யாதீர்கள்.
 
அரசு குறுஞ்செய்தி
அதிகாரப்பூர்வ குறுஞ்செய்திகள் எப்போதும் முறையான 'Sender ID' (உதாரணமாக: Vahan/Challan) மூலம் வரும், தனிப்பட்ட மொபைல் எண்களில் இருந்து வராது.
 

நீங்கள் ஏற்கனவே அந்த லிங்க்கை கிளிக் செய்துவிட்டீர்களா?

​ஒருவேளை நீங்கள் அந்தச் செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், உடனடியாக இவற்றைச் செய்யவும்:

  1. இன்டர்நெட்டை அணைக்கவும்: வைஃபை (Wi-Fi) மற்றும் மொபைல் டேட்டாவை உடனடியாக ஆஃப் செய்யவும்.
  2. செயலியை நீக்கவும்: அந்தப் போலிச் செயலியை உடனடியாக 'Uninstall' செய்யவும்.
  3. ஃபேக்டரி ரீசெட் (Factory Reset): போனில் உள்ள வைரஸை முழுமையாக நீக்க, உங்கள் போனை ரீசெட் செய்வது பாதுகாப்பானது (முக்கியமான டேட்டாவை பேக்-அப் எடுத்துவிட்டு செய்யவும்).
  4. வங்கிக்குத் தகவல்: உங்கள் வங்கிக்குத் தகவல் கொடுத்து கார்டு அல்லது ஆன்லைன் பேங்கிங் வசதியை தற்காலிகமாக முடக்கச் சொல்லுங்கள்.
போலீஸ் அறிவுரை
அபராதம் தொடர்பான செய்திகள் வந்தால், உடனடியாகப் பயப்படாமல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் வண்டி எண்ணைப் போட்டுச் சரிபார்க்கவும். தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்க்குகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.
 
ஒருவேளை நீங்கள் பணத்தை இழந்துவிட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழையுங்கள் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments