அறந்தாங்கியில் குத்தகை நிலத்தில் பஸ் நிலையம் அமைக்கும் அரசாணை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு



அறந்தாங்கியில் குத்தகை நிலத்தில் பஸ் நிலையம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதிய பஸ் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த கார்த்திக், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் 8.38 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 'சுலோச்சனாம்பாள்புரம் சத்திரம் அறக்கட்டளை நிலத்தில் பல ஆண்டுகளாக வாரச்சந்தை இயங்கி வருகிறது. அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தில் 3.50 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்க 30 ஆண்டுகள் குத்தகை வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தற்போதுள்ள பழைய பஸ் நிலையத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தூரத்தில் புதிய பஸ் நிலையமும் அமைய உள்ளது. இது நகரின் மையப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலையும், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் ஏற்படுத்தும். பஸ் நிலையம் அமையவுள்ள இடத்திற்கு அருகில் போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்றவை உள்ளன. எனவே புதிய பஸ் நிலையத்தை நகருக்கு வெளியே மக்களுக்கு வசதியான இடத்தில் அமைக்க வேண்டும். வாரச்சந்தை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது இதே கோரிக்கையுடன் நிலுவையில் இருந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அரசாணை ரத்து

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், புதிய பஸ் நிலையம் கட்டுவது தொடர்பான நடவடிக்கைகளில் டெண்டர் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. அதாவது அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் 3.50 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பது ஏற்புடையதல்ல. எனவே அந்த அரசாணையை ரத்து செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

© 2026 All Rights Reserved. Powered by Summit
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments