குப்பைகளால் சூழப்பட்டு சேதமடையும் குடிநீர் குழாய் வால்வு: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோபாலப்பட்டிணம் மக்கள் கோரிக்கை!




புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டானிபுரசகுடி ஊராட்சியைச் சேர்ந்த கோபாலப்பட்டிணம் ஆலமரம் பகுதியில் அமைந்துள்ள முக்கிய குடிநீர் திறக்கும் வால்வு தற்பொழுது குப்பைகளால் முழுமையாக மூடப்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

இப்பகுதியில் தினசரி சேகரித்து கொட்டப்படும் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாததால், இந்த குடிநீர் வால்வு இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு குப்பைக் கழிவுகள் சூழ்ந்துள்ளன. மேலும், இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சில நேரங்களில் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் ஏற்படும் கடுமையான வெப்பத்தின் காரணமாக, பிளாஸ்டிக் பொருட்களால் ஆன இந்த முக்கிய குடிநீர் வால்வு பலமுறை தீயில் கருகி தற்பொழுது பலத்த சேதமடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் இந்த வால்வு பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதிக்கான குடிநீர் விநியோகத்தில் எப்போது வேண்டுமானாலும் தடை அல்லது பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், தீ வைக்கும் சமயங்களில் நிலத்தடி நீர் குழாய்களும் சேதமடையும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, இப்பகுதியில் ஏதேனும் பெரிய அளவிலான குடிநீர் விநியோகப் பாதிப்போ அல்லது விபத்தோ ஏற்படுவதற்கு முன்பாக, அங்கு தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், சேதமடைந்துள்ள குடிநீர் திறக்கும் வால்வைச் சீரமைத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற செயலாளருக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments