புதுக்கோட்டையில் உள்ள கடைகளில் எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை




புதுக்கோட்டையில் உள்ள கடைகளில் எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் சங்கரலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எலி மருந்து

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலி மருந்து, கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகள் ஆகியவற்றை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி குற்றமாகும். எனவே, அனைத்துப் பெட்டிக்கடை, மளிகைக்கடை மற்றும் பேரங்காடிகளின் விற்பனையாளர்களும், உரிமம் பெற்று மேற்கண்ட பூச்சிகொல்லிகளை விற்பனை செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி உரிய பதிவேடுகளையும், ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்யும் பொழுது வாங்குபவரின் கையொப்பம் பெற்று உரிய பட்டியலை வழங்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பற்பசை வடிவில் விற்பனை செய்யப்படும் ரேட்டால் எனப்படும் 3 சத மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலிக்கொல்லி விஷம் தமிழக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இதனை விற்பனையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது. மேலும் விற்பனை செய்வது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. மேலும் விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை உணவுப் பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டு பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments