கோட்டைப்பட்டினத்தில் காட்சிப் பொருளாக மாறியுள்ள புதிய மின்மாற்றி; பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை!



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்சிப் பொருளாக மாறியுள்ள புதிய மின்மாற்றி
மேலத்தெரு மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மின்சார வசதி இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்தப் புகாரை அடுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T. ராமச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனா.அக்பர் அலி ஆகியோரின் முயற்சியால், அப்பகுதிக்கு எனப் புதிய மின்மாற்றி (Transformer) ஒதுக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் இந்தப் பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.

மக்கள் வேதனை
மின்மாற்றி அமைக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும், இன்று வரை அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக உள்ள நிலையில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்க முடியாமல் முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

போர்க்கால நடவடிக்கை தேவை
இது குறித்து மேலத்தெரு மற்றும் ரஹ்மத் நகர் பொதுமக்கள் கூறுகையில், "பலமுறை கோரிக்கை வைத்தும் மின் வாரிய அதிகாரிகள் மௌனம் காப்பது வேதனை அளிக்கிறது. இனியாவது காலதாமதம் செய்யாமல், கோட்டைப்பட்டினம் மின்சார வாரிய அதிகாரிகள் இந்தப் புதிய மின்மாற்றியை உடனடியாகச் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments