கோட்டைப்பட்டினம் ரஹ்மத் நகரில் ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத மின்மாற்றிகள்: உரிய நடவடிக்கை எடுக்காவிடில் சாலை மறியல் என எச்சரிக்கை



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் ரஹ்மத் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குறைந்த மின் அழுத்தப் (Low Voltage) பிரச்சனையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து கொடிக்குளம் மின்சார வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

காட்சிப்பொருளாக உள்ள மின் மாற்றிகள்
ரஹ்மத் நகர் பகுதியில் நிலவும் மின் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், கழுத்தான் குளக்கரையில் இரண்டு புதிய மின் மாற்றிகள் (Transformers) ஒரு வருடத்திற்கு முன்னரே நிறுவப்பட்டன. ஆனால், அவை அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமல் பெயரளவில் மட்டுமே இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்களின் பாதிப்புகள்
மனுவில் குறிப்பிட்டுள்ளபடி, இப்பகுதியில் மின்சாரம் 140V முதல் 160V என்ற மிகக் குறைந்த அளவிலேயே வருவதால், வீடுகளில் உள்ள ஏசி, பிரிட்ஜ், மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. மேலும், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின் தடையால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுமட்டுமின்றி, இப்பகுதியில் உள்ள சில மின் கம்பங்கள் (எண்: 746) மிகவும் பலவீனமாக விழுந்துவிடும் நிலையில் உள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அச்சமும் நிலவுகிறது.

மறியல் போராட்ட எச்சரிக்கை
இந்தப் பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே மின்சார வாரிய அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாகவும் நேரிடையாகவும் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இந்த மனுவின் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, நிறுவப்பட்டுள்ள மின் மாற்றிகளை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும்பட்சத்தில், பொதுமக்களைத் திரட்டி கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments