நாகை அருகே கப்பல் பழுது: 6 மணி நேரத்துக்கு மேலாக நடுக்கடலில் பரிதவித்த 142 பயணிகள் படகு மூலம் கட்டி துறைமுகத்துக்கு இழுத்து வரப்பட்டது



நாகை அருகே என்ஜின் பழுதாகி நின்ற கப்பலால் நடுக்கடலில் 6 மணி நேரத்துக்கு மேலாக 142 பயணிகள் பரிதவித்தனர். பழுதான கப்பல் படகு மூலம் கட்டி துறைமுகத்துக்கு இழுத்து வரப்பட்டது.

கப்பல் என்ஜின் பழுது

நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையே தனியார் கப்பல் நிறுவனத்தின் சார்பில் ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. வாரத்தில் 6 நாட்கள்(செவ்வாய்க்கிழமை) தவிர இருமார்க்கத்திலும் இந்த கப்பல் இயக்கப்படுகிறது. 3 மணி நேர கடல் பயணம் என்பதால் இந்தியா-இலங்கை சுற்றுலா பயணிகள் இந்த கப்பலை பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று காலை நாகை துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு இலங்கை சென்றடைந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன்துறையில் இருந்து 142 பயணிகளுடன் நாகை நோக்கி கப்பல் புறப்பட்டு வந்தது. அப்போது நடுக்கடலில் திடீரென கப்பல் என்ஜின் பழுதடைந்தது.

6 மணி நேரம் பயணிகள் பரிதவிப்பு

இதனால் கப்பல் நங்கூரமிட்டு நடுக்கடலில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கப்பல் ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் கப்பல் கேப்டன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் போராடியும் பழுதடைந்த கப்பல் என்ஜினை சரிசெய்ய முடியவில்லை.

இதனால் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடுக்கடலிலேயே பயணிகள் பரிதவித்தனர். இதனால் பயணிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

படகு மூலம் துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டது

இதுகுறித்து நாகை துறைமுகத்திற்கு கப்பல் கேப்டன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மீனவர்கள் படகு மூலம் நடுக்கடலுக்கு சென்று கடலில் நிறுத்தி வைத்திருந்த கப்பலை கயிறு கட்டி துறைமுகத்திற்கு இழுத்து வந்தனர். கப்பலில் பயணம் செய்து வந்த பயணிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக நாகை துறைமுகம் முன்பு 4 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

ெசாந்த ஊருக்கு புறப்பட்ட பயணிகள்

இதையடுத்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வழக்கமாக மாலை 5 மணிக்கு வர வேண்டிய கப்பல் 6 மணி நேரம் கால தாமதமாக இரவு 11 மணிக்கு நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. கப்பலில் மயங்கிய பயணிகளுக்கு மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதனால் நாகை துறைமுகத்தில் நள்ளிரவு 1 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 142 பயணிகளும் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

புதிய கப்பல் இயக்க கோரிக்கை

கடந்த சில நாட்களில் தொடர்ந்து பழுதடைந்து வந்த கப்பலை அதிகாரிகள் போக்குவரத்துக்கு அனுமதித்ததாகவும், இதனால் பயணம் செய்யும் இருநாட்டு பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே அடிக்கடி பழுதடையும் கப்பலை மாற்றி புதிய கப்பலை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:



Post a Comment

0 Comments