புதுக்கோட்டை மாவட்டத்தில் விசைப்படகுகளை 15, 20-ந் தேதிகளில் அதிகாரிகள் ஆய்வு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் விசைப்படகுகளை 15, 20-ந் தேதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். அப்போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

மீன்பிடி தடைக்காலம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் மீன்பிடி இறங்கு தளங்கள் உள்ளன. இங்கு 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தில் மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டு ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜுன்) 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகள் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகிறது. படகின் உறுதித்தன்மை, எந்திரத்தின் குதிரைதிறன் அளவு, படகின் நீள, அகலம் ஆகியவை பதிவு சான்றுடன் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் மானிய விலையிலான டீசல் மற்றும் இதர மானியத்திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

15, 20-ந் தேதிகளில் ஆய்வு

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளை மீன்வளம் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன்படி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகுகள் வருகிற 15-ந்தேதியும், கட்டுமாவடி முதல் ஏனாதி முடிய உள்ள 32 மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகுகளை வருகிற 20-ந்தேதி அன்று சிறப்பு குழுக்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மீனவ கிராம கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் மீனவ கிராமங்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

படகு ஆய்வின் போது விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்களின் ஆதார் அட்டை, படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை மற்றும் மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆகியவை ஆய்வுக்குழு வசம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தங்களது விசைப்படகு, நாட்டுப்படகினை தவறாது ஆய்வுக்குட்படுத்த வேண்டும். எனவே வருகிற 15-ந்தேதி மற்றும் 20-ந்தேதி ஆகிய நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments